வெளிநாடுகளில் பரவுகிறது 'குரங்கு காய்ச்சல்'; நோய் பரவுவது எப்படி? நிபுணர்கள் விளக்கம்

‘குரங்கு காய்ச்சல்’

‘மங்கி பாக்ஸ்’ என்னும் குரங்கு காய்ச்சல் இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா என பல நாடுகளில் பரவத்தொடங்கி உள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பு ஒரு அவசர கூட்டம் நடத்தி விவாதிக்க உள்ளது.

இது பெரியம்மை போன்றது. இந்த வைரஸ் பாதிப்பு முதன் முதலாக 1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடம் இருந்து கண்டறியப்பட்டதால் அதற்கு ‘குரங்கு காய்ச்சல்’ என்று பெயர் வந்தது. 1970-ம் ஆண்டு முதன் முதலாக மனிதர்களை இந்த ‘குரங்கு காய்ச்சல்’ தாக்கியது.

பரவுவது எப்படி?

பாதிக்கப்பட்ட நபர் அல்லது பிராணி அல்லது வைரஸ் ஒட்டிக்கொண்டுள்ள பொருள் மூலம் ‘குரங்கு காய்ச்சல்’ மனிதர்களுக்கு பரவுகிறது. காயங்கள், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள், வைரஸ் கலந்த பொருட்கள் வைரஸ் பரவலுக்கு காரணமாகின்றன என்று சுகாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். பாலுறவு மூலமும் இந்த நோய் பரவலாம். .

இந்த வைரசின் அடைகாக்கும் காலம் அல்லது நோய்த்தொற்றில் இருந்து அறிகுறிகள் தோன்றும் வரையிலான இடைவெளி பொதுவாக 6 நாளில் இருந்து 13 நாள்வரை இருக்கும்.

இந்த வைரசின் அறிகுறிகள் காய்ச்சல், சிரங்கு போன்ற கொப்புளம், கணுக்களில் வீக்கம் போன்றவை ஆகும்.

இறப்புவிகிதம்

இந்த நோய் தன்னைத்தானே கட்டுப்படுத்தி அதன் அறிகுறிகள் 2 முதல் 4 வாரங்கள் நீடிக்கலாம். கடுமையான பாதிப்பும் ஏற்படலாம். இதன் இறப்புவிகிதம் 3 முதல் 6 சதவீதம் வரை இருக்கும். ஆப்பிரிக்காவில் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான 10 பேரில் ஒருவருக்கு மரணம் நேரிட்டுள்ளது.

பெரியம்மை தடுப்பூசியையே இதற்கும் தடுப்பூசியாக பயன்படுத்தலாம்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.