அன்று போட்டியிட்டது போல் இன்றும்… ஜனாதிபதி பதவிக்கு லாலு போட்டி?.. நாளை மறுநாள் வேட்பு மனுதாக்கல் செய்ய திட்டம்

பாட்னா: ஜனாதிபதி பதவிக்கு நடக்கும் தேர்தலில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடக்கிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் யாரை வேட்பாளராக களத்தில் இறக்கலாம் என்று ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வரும், மாட்டு தீவன வழக்கில் சிறை தண்டனை பெற்று ஜாமினில் உள்ளவருமான லாலு பிரசாத் யாதவ், குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தேர்தலில் ‘பிஹாரி’ வேட்பாளர் ஒருவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘குடியரசு தலைவர் பதவிக்கு நடக்கும் தேர்தலில் போட்டியிட லாலு பிரசாத் யாதவ் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்காக டெல்லிக்கு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளார். வரும் 15ம் தேதி (நாளை மறுநாள்) வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்போதைய பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்துக்கும், மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாருக்கும் இடையே போட்டி இருந்தபோதும், லாலு பிரசாத் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவரிடம் போதிய எண்ணிக்கையில் முன்மொழிபவர்கள் இல்லாததால், கடந்த முறை அவரது ஆவணங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் இந்த முறை, போதிய அளவிற்கு முன்மொழிபவர்கள் இருப்பதால் அவரது வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பில்லை’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.