உசேன்பாட்ஷா என்பவர் தன் மனைவி, மகளுடன் சென்னை பல்லாவரம் அடுத்துள்ள அனகாபுத்தூரில் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். அவர் வீட்டில் அடிக்கடி கரையான் அரிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 31-ந்தேதி உசேன்பாட்ஷா, கரையான்கள் மீது பெயின்ட்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்துள்ளார். அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த அவரின் 13 வயது மகள் பாத்திமா மீது தீப்பற்றியது.

உசேன்பாட்ஷாவும், அவரின் மனைவியும் தீயை அணைக்க முயன்றபோது அவர்கள் மீதும் தீப்பற்றியது. வலியால் அவர்கள் அலறிய சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் உசேன்பாட்ஷாவும், அவரின் மனைவியும் லேசான தீக்காயத்துடன் உயிர் தப்பினர். ஆனால் சிறுமி பாத்திமா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கரையானை அழிக்க வைத்த தீயில் உடல் கருகி சிறுமி பலியான சம்பவம் அனைவரையும் சோகத்த்தில் ஆழ்த்தியது.
கரையானின் ஆயுள் 20 முதல் 25 ஆண்டுகள் என்கிறார்கள். அதற்கு மிகவும் பிடித்தமான உணவு மண், மரத்தூள், காகிதம், துணிமணிகள் ஆகும். செங்கல்லிலேயே துளையிட்டு உள்ளே நுழைந்து சுவர்களின் உட்புற மண் பகுதியினை அரித்துத் தின்று விடும். வெளிப் பார்வைக்கு நமக்குத் தெரியாது, சுவரில் விரிசல்கள் விழும்போதுதான் அறிய முடியும்.
பார்வைக்கு சிறிதாக இருக்கும் இந்தக் கரையான்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்பதால் பலரும் பயப்படுகின்றனர். அதற்காக தீவிர முயற்சி செய்து அழிக்கின்றனர். சில இடங்களில் நெருப்பை வைத்து அழிக்கின்றனர்.. இப்படி அனகாபுத்தூரில் நடந்த சோகம் இனி நடக்கக்கூடாது. எனவே பாதுகாப்பான முறைகளில் கரையான்களை அழிக்கவும், கரையான்களில் இருந்து வீட்டைப் பாதுகாக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

செம்மண் மற்றும் இதர மண் வகைகள்தான் கரையானின் பிறப்பிடம் என்பதால், வீடு கட்டத் தொடங்கும் போதே கரையான்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டிய வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
வீடுகட்டும் போது அஸ்திவாரத்தில் மேலே கட்டப்பட இருக்கும் அதன் சுற்றுச்சுவர்களின் அடிப் பகுதிகளில் ஆங்காங்கு துளையிட்டு, தேவையான அளவில் கரையான் மருந்தினை உள்ளே செலுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் அதற்கடுத்து 25-30 ஆண்டுகளுக்கு அந்தக் கட்டடத்தில் கரையான் தொல்லை இருக்காது.
வீட்டுச் சுவர்கள், மர ஜன்னல்கள், மரக்கதவுகள், அலமாரிகள் என மர வேலைப்பாடுகள் உள்ள அனைத்து இடங்களிலும் கரையான் புகுந்துவிடும். எனவே பழைய வீடுகளில் ஏற்பட்ட கரையான்களைக் கட்டுப்படுத்த, சுவர்களில் துளையிட்டு கரையான் தடுப்பு ரசாயனங்களை அதில் செலுத்தும் முறைகள் உண்டு.
பழைய வீடுகளை வாங்குபவர்கள் கரையான்கள் உள்ளிட்ட பூச்சி தொல்லைகள் உள்ளதா என்பதை அறிய வேண்டும். மனைக்கு அருகில் அமைந்துள்ள நிலங்களிலிருந்தும்கூட கரையான்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
அதனால் கட்டுமான பொறியாளர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் அல்லது இதற்காகவே உள்ள தனியார் ‘பெஸ்ட் கன்ட்ரோல்’ (Pest Control) நிறுவனங்கள் மூலம் இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும்.
கரையான்களைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
வீடுகளில் தரைப்பகுதி, சுவர்பகுதி, வெளிப்புற சுவர்பகுதி, ஜன்னல் நிலை என எந்த இடங்களிலும் ஓட்டைகள், சிறு துவாரங்கள் இருக்கக்கூடாது. இருந்தால் அதை பாதுகாப்பாக சிமெண்ட் மூலம் பூசி அடைக்க வேண்டும்.
பழைய மர பொருள்கள், பழைய பேப்பர்கள் என பயனற்ற பொருள்களைச் சேர்த்து வைக்கக்கூடாது.
கரையான் மரச்சாமான்களை விரும்பிச் சாப்பிடும். எனவே புதிய மரச்சாமான்களை வாங்கினால், முன்னெச்சரிக்கையாக அதன் மேல் ‘டெர்மைட் கன்ட்ரோல்’ (termite control) என்ற பூச்சிக்கொல்லியைப் பூசிவிடுங்கள். இதனால் கரையான், பூஞ்சைகள் அதில் வராது.
வேம்பு, தேக்கு மரங்களில் இயல்பாகவே கரையான்கள் தங்காது என்பதால் அவற்றில் மரச்சாமான்களை செய்வது சிறந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் துறை போராசிரியர் ஆல்வின், ”மற்ற பூச்சி இனங்களை மாதிரி கரையான்களை எளிதாக நினைக்கக்கூடாது” என்கிறார்.
அவர் கூறும் வழிமுறைகள்:
”கரையான்களைப் பொறுத்தவரை பெஸ்ட் கன்ட்ரோல் போன்ற தொழில்முறை நிறுவனங்கள் மூலம் அழிப்பதே சிறந்தது. நாமாக மருந்துகளைக் கொண்டு அழிப்பது இயலாது.. ஏனென்றால் ஓர் அடிக்கு நம் கண்களுக்கு கரையான்கள் தெரிகின்றன என்றால் உள்ளே பல லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கரையான்கள் கண்களுக்குத் தெரியாமல் வாழும் என்று அர்த்தம்.
சுவரின் உட்புறம் அல்லது தரையின் கீழே மண்ணுக்கடியில் அது பல்கிப் பெருகி காணப்படும். கண்ணுக்குத் தெரியாமல் கட்டடங்களை அரித்து பலவீனப்படுத்தும். அதன் பாதிப்பை உடனடியாக நம்மால் உணர முடியாது. ஆனால் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தும். எனவே பல்லி, கரப்பான்களை ஒழிப்பது போல நம்மால் கரையான்களை அழிக்க முடியாது. அதற்கென இருக்கும் வல்லுநர்கள், தொழில் நிறுவனங்கள் மூலம் தரை, சுவர்களில் துளையிட்டு பாதுகாப்பாக மருந்தைச் செலுத்தினால் மட்டுமே கரையான்களைத் தடுக்க முடியும் என்றார்.