'சிவசேனா கூட்டணி நிரந்தரமல்ல!' – காங்கிரஸ் தலைவர் பரபரப்பு பேச்சு!

சிவசேனா கட்சி உடனான கூட்டணி நிரந்தரம் அல்ல என, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணி அரசு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பதவி வகித்தார். இதன் பிறகு, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால், மகாராஷ்டிர மாநில அரசியலில் என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநில சட்ட மேலவை தலைவராக சிவசேனா கட்சியின் அம்பாதாஸ் தான்வே நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த பதவியை எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு இது ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் அளித்துள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சட்ட மேலவையின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி சிவசேனாவிற்கும், தேசியவாத காங்கிரசுக்கும் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து எங்களிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை. தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் கருத்து.

இந்த விவகாரம் குறித்து சிவசேனா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். அதற்கு அவர்கள் விரும்பவில்லை என்றால், அது அவர்களின் பிரச்னை. மாறுபட்ட சூழ்நிலையில் தான் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தோம். இந்த கூட்டணி இயற்கையானதோ அல்லது நிரந்தரமானதோ அல்ல.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்டது. இந்த அரசு நீண்ட காலம் நீடிக்காது. 40 நாட்களுக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டும் இதுவரை அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதிலிருந்தே இந்த ஆட்சியின் அவல நிலை வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.