கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைதாகி விடுதலை

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில், மாணவியின் கடிதம் குறித்து பொய் செய்தி வெளியிட்டதாக மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை போலீசார் கைது செய்ததற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி மரணம் அடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணிவிக்கா நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது குறித்தும் சிறப்பு அதிரடிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஓவ்வொரு நாளும் ஊடகங்களும் யூடியூப் சேனல் நடத்துபவர்களும் புதுப்புது தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். இது சிபிசிஐடி விசாரணையில் இடையூறு ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக எந்த தகவலையும் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வெளியிடக் கூடாது. அதை காவல்துறையிடம் அளிக்க வேண்டும் என்று போலீசார் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில், மாணவியின் கடிதம் குறித்து பொய் செய்தி வெளியிட்டதாக இணையதள ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சாவித்திரி கண்ணனை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

அறம் இணையதள ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சாவித்திரி கண்ணன், கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தார். வழக்கு நடைபெற்று வரும் வேளையில் மாணவி எழுதிய கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையது இல்லை என்பதை தடயவியல் கோர்ட்டில் தெரியப்படுத்தி இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த கலவர வழக்கை விசாரித்து வரும் சிறப்பு அதிரடிப்படை போலீஸார் பல்வேறு நபர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை சைபர் கிரைம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அச்சுப் பத்திரிகைகளில் பணியாற்றிய முத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் தற்போது அரம் ஆன்லைன் என்ற இணையதளத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்றம் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவில், மாணவி எழுதியதாக ஒரு கடிதத்தையும் குறிப்பிட்டிருந்தார்கள். மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், அந்த கடிதம் போலியானது என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘போர்ஜரி கடிதம் பொய்க்கு துணை போகிறதா அரசாங்கம்?’ என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தார். இதனால், கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக சாவித்திரி கண்ணனை அடையாறில் உள்ள அவருடைய வீட்டில் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சிக்கு அழைத்துச் சென்றிருப்பதாக விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை போலீசார் கைது செய்ததற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத்தின் நிறுவனர் பொன்னுசாமி கூறுகையில், “மூத்த பத்திரிகையாளரும், அறம் இணையதள ஊடக ஆசிரியருமான சாவித்திரி கண்ணனை சைபர் கிரைம் போலீஸார் எனக் கூறி கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் தனிப்படை போலீசார் இன்று (11.09.2022) வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கருத்து சுதந்திரத்தைப் பறித்து, ஊடகவியலாளர்களின் குரல் வளையை நெரித்து விட்டால் நீதி கேட்டு குரல் கொடுப்பவர்களை எளிதில் பின் வாங்கச் செய்து விடலாம் என நினைக்கும் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் கண்டனங்கள். மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சைபர் கிரைம் போலிசாரால் கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.