கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் அடுத்து வடமதுரை வி.ஐ.பி காலனி சேர்ந்தவர் பிரவீன் சாமுவேல். இவரது தந்தை ரிச்சர்ட் அசரியா. வயது முதிர்வின் காரணமாக கடந்த ஜூன் 12-ம் தேதி அவர் உயிரிழந்தார்.
ரிச்சர்ட் அசரியாவின் உடல் தொப்பம்பட்டியில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்தப்பகுதி சிறிய இடமாக இருந்ததால் அங்கு யாரும் கல்லறை கட்ட அனுமதி வழங்கவில்லை. ஆனால், பிரவீன் சாமுவேல் மற்றும் குடும்பத்தினர் தனது தந்தைக்கு கல்லறை கட்ட விரும்பினார்கள். இதற்காக ஊட்டியில் இவர்களது குடும்பத்தினரின் உறுப்பினராக உள்ள ஒரு கிறிஸ்துவ ஆலயத்தின் கல்லறை தோட்டத்தில் கல்லறை கட்ட அனுமதி கிடைத்தது.
இதன் காரணமாக தனது தந்தையின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து ஊட்டி எடுத்துச் செல்ல அனுமதி கேட்டு பிரவீன் சாமுவேல் கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தார். கலெக்டர் இந்த மனு மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். பலகட்ட விசாரணைக்கு பிறகு சடலத்தை தோண்டி எடுக்க வருவாய் கோட்டாட்சியரின் அனுமதி கிடைத்தது.
இதனை அடுத்து 3 மாதங்களுக்கு பின்பு நேற்று வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்பு உடல் தோண்டி எடுக்கப்பட்டு ஊட்டிக்குகொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த கல்லறை தோட்டத்தில் ரிச்சர்ட் அசரியாவின் உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து பிரவீன் சாமுவேல் தெரிவிக்கும்போது, தந்தைக்கு கல்லறை கட்ட வேண்டும் என்ற எனது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. இதற்கு அனுமதி கொடுத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சாமுவேல் தெரிவித்துள்ளார்.