சென்னை: தமிழக காவல் துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஆயுதப்படை அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது
தமிழக காவல் துறையில் 2022-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், காவல் துறையின் தெற்கு, மேற்கு, வடக்கு, மத்திய மண்டலங்கள், சென்னை பெருநகர காவல், தலைமையிடம், ஆயுதப்படை, பெண்கள் பிரிவு என 8 அணிகளில் இருந்து 220காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் ரைபிள் பிரிவில் ஆயுதப்படை அணி முதல் இடம், மத்திய மண்டலம் 2-ம் இடம், மேற்கு மண்டலம் 3-ம் இடம் பிடித்தன. பிஸ்டல், ரிவால்வர் பிரிவில் சென்னை பெருநகர காவல் அணி முதல் இடம், தலைமையிட அணி 2-ம் இடம், ஆயுதப்படை அணி 3-ம் இடம் பிடித்தன. கார்பைன் பிரிவில் தலைமையிட அணி முதல் இடம், வடக்கு மண்டலம் 2-ம் இடம், ஆயுதப்படை 3-ம் இடம்பிடித்தன.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் முதல் இடத்தை ஆயுதப்படை அணியும், 2-ம் இடத்தை தலைமையிட அணியும், 3-ம் இடத்தை சென்னை பெருநகர காவல் அணியும் பெற்றன.
உயர் அதிகாரிகள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை டிஜிபி சைலேந்திர பாபு, 2-ம் இடத்தை முதல்வர் பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆர்.திருநாவுக்கரசு, 3-ம் இடத்தை தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் ஆகியோர் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மாநில அளவிலான இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள், அடுத்ததாக தேசிய அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக காவல் துறைசார்பில் பங்கேற்பார்கள் என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.