சென்னை: தமிழகத்தில் மின்கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
சென்னை பெருங்குடியில் சிறு, குறு தொழில் நடத்தும் எஸ்.ஜெயபிரகாசன்: பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கரோனா போன்றவற்றால் ஏற்கனவே தொழில் நடத்த முடியாமல் முடங்கும் சூழல் இருந்துவருகிறது. இதுதவிர, மூலதனப் பொருட்கள் விலை, வாடகை உயர்வால் ஒவ்வொரு நாளும் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறோம். இந்த சூழலில், மின்கட்டணமும் உயர்ந்தால் எங்கள் தொழிலை இயக்காமல் மூடிவிட்டு தான் செல்ல வேண்டும். எனவே, மின்கட்டண உயர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் முன்னாள் தொடர்பு அலுவலர் எம்.சோமசுந்தரம்: மின்கட்டண உயர்வு சரியா, தவறா என்று ஆராய்ச்சி செய்வதைவிட, இதை தவிர்த்திருக்கலாம். மற்ற மாநில அரசுகள் (டெல்லி, பஞ்சாப்) இலவச மின்சாரம் தருகின்றன. இருந்தாலும், தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை மேம்படுத்தி இருக்கலாம். சூரிய மின்சக்தி தொலைநோக்கு திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதை செயல்படுத்தி இருக்கலாம். மாற்றுவழியில் மின்சார உற்பத்திக்கு முயற்சிக்காமல், அதிக விலைக்கு நிலக்கிரி வாங்கி நஷ்டத்தை உருவாக்கி விட்டார்கள். விதிகளை மீறி கூடுதல் மீட்டர் வைக்கும் கம்பெனிகள், திருட்டுத்தனமாக மின்சாரத்தை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்கள். உண்மையில் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோர் தலையில் சுமையை ஏற்றுவது ஏற்புடையது அல்ல. கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
எஸ்.கல்பனா – இல்லத்தரசி: ஏற்கனவே சமையல் எரிவாயு விலை, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வருகிறோம். இந்நிலையில், மின்கட்டணத்தை உயர்த்தி இருப்பது மேலும் கவலை அளிக்கிறது. இதனால், எங்களுக்கு மாத வீட்டு பட்ஜெட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்படும். எனவே, மின்கட்டண உயர்வை குறைப்பது குறித்து அரசுபரிசீலனை செய்ய வேண்டும்.
கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச் சங்கதலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார்: கரோனா பாதிப்பால் ஓராண்டுக்கு மேல் கோயம்பேடு சந்தையில் சிறு கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இப்போது தான் அதன் பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே சொத்து வரி உயர்வு என்ற பெயரில் தமிழக அரசு பெரும் சுமையை சிறு வியாபாரிகள் தோளில் சுமத்தியது. அடுத்து மின் கட்டண உயர்வு என்ற பெயரில் தமிழக அரசு பேரிடியை வியாபாரிகள் தலையில் இறக்கியுள்ளது. ஏற்கெனவே நாங்கள் வணிக மின் கட்டணத்தைதான் செலுத்தி வருகிறோம். மேலும் உயர்த்தியது கடுமையாக பாதிக்கும். இந்த சுமைகளை நாங்கள் மக்கள் தலையில்தான் இறக்கி வைக்க முடியும். எனவே, கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
வியாசர்பாடி டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் காளிஷா: அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 100-ல் 10 சதவீதம் பேர் மட்டுமே வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்கள். பெண்கள் உட்பட அனைவரும் வேலைக்கு சென்று சம்பாதித்தால் தான், குடும்பம் நடத்த முடியும். அடுக்குமாடி குடியிருப்பு, வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு குடியிருப்பு பராமரிப்பு, தண்ணீர் என பணம் வசூல் செய்யப்படுகிறது. தற்போது, மின்கட்டணத்தை உயர்த்தியது குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்.