வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீன அதிபர் ஷீ ஜிங்பிங், இரண்டாண்டுகளுக்குப் பிறகு தன் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்கிறார். கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு அவர் செல்கிறார். இந்த பயணத்தின் போது, நம் பிரதமர் மோடியை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாக வைத்து செயல்படும், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் வரும் 15 – 16ல் நடக்கிறது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை உள்ளன. இந்த அமைப்பில், ஈரானும் இணைய உள்ளது. இந்த மாநாட்டுக்குப் பின், அமைப்பின் தலைமை பொறுப்பை ஓராண்டுக்கு இந்தியா வகிக்க உள்ளது.
இரண்டு ஆண்டுக்குப் பின் நேரடியாக மாநாடு நடக்க உள்ள நிலையில், இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷீ ஜிங்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்பர் என கூறப்படுகிறது. இந்நிலையில், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் இந்த மாநாட்டில் பங்கேற்பதை, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளது. கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு, வரும், 14 – 16 வரை அவர் பயணம் மேற்கொள்கிறார்.
![]() |
கடந்த, 2020 ஜன., 17 – 18ல் மியான்மருக்கு ஜிங்பிங் பயணம் மேற்கொண்டார். கொரோனா வைரஸ் பரவலால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. உஸ்பெகிஸ்தானில் நடக்கும் எஸ்.சி.ஓ., மாநாட்டுக்கு இடையே ரஷ்ய அதிபர் புடினை, ஜிங்பிங் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. அதுபோல, பிரதமர் மோடியையும் அவர் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமாக உள்ளது. பல சுற்று பேச்சுகளுக்குப் பின் கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை துவங்கியுள்ளது.இந்நிலையில், மோடி, ஜிங்பிங் இடையே சந்திப்பு நிகழ்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement