வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டன் மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டிவி’ நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியில் 2018ல் திருமணம் செய்து கொண்டார். அரண்மனையில் வசித்து வந்த அவர்கள், 2019ல் அரச குடும்பத்தைவிட்டு வெளியேறுவதாக அறிவித்து அமெரிக்காவில் குடியேறினர். இது, அரச குடும்பத்தில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன் பின் பல பத்திரிகை பேட்டிகளில், அரச குடும்பத்தில் நிறவெறி உள்ளதாக ஹாரி – மேகன் தம்பதியர் வெளிப்படையாக கூறினர். அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையின் நிறம் குறித்து அரச குடும்பத்தினர் விமர்சித்ததாக கூறினர். இது, பிரிட்டன் அரச குடும்பத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. குடும்பத்தாருடன் தொடர்பு இல்லாமல் இருந்த ஹாரி, ராணியின் மறைவு செய்தி அறிந்ததும், ஸ்காட்லாந்தின் பால்மோரல் அரண்மனைக்கு கண்ணீர் மல்க வந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின.

தற்போது, அண்ணன் வில்லியம் – கேட் தம்பதியுடன் இணைந்து, ஹாரி – மேகன் தம்பதியர், விண்ட்ஸர் அரண்மனை வாசலில் குவிந்த மக்களை சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகின. ராணியின் மறைவால், பிரிந்த அரச குடும்பம் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பை பிரிட்டன் மக்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement