50 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற 36-வது சிறப்பு மெகா முகாமில் 12.62 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற 36-வதுசிறப்பு மெகா முகாமில் 12.62 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்து வதற்காக மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 35 மெகா முகாம்கள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், 36-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் தமிழகம்முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நேற்று நடைபெற்றது. அரசுமருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணைசுகாதார நிலையங்கள், பள்ளிகள்,ஊராட்சி மற்றும் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 2,000 இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடந்தது.

இறுதியாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா முகாமில் 12.62 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், இன்று வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது. அரசுமருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும்தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிதாக 431 பேருக்கு கரோனா

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 238, பெண்கள் 193 என மொத்தம் 431 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 86 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 73,667 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 30,763 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று மட்டும் 461 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 4,866 பேர்சிகிச்சையில் உள்ளனர். நேற்றுஉயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,038 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 9,069 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் கரோனா பாதிப்பு 434 ஆகவும், சென்னையில் 85 ஆகவும் இருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.