ரேஷன் அரிசி கடத்தல்: ஒரே வாரத்தில் இவ்வளவா?

ஒரு வார காலத்தில் 924 குவிண்டால் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 32 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத்திட்டம் / சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.

அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும், அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955-ன்படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980-ன்படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, 29.08.2022 முதல் 04.09.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் ரூபாய் ஐந்து லட்சத்து இருபத்தோராயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்பது மதிப்புள்ள, 924 குவிண்டால் அரிசியும், அக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 32 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன. அக்குற்றச் செயலில் ஈடுபட்ட 198 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.