சிவிங்கிகளை அழைத்து வரசிறப்பு விமானம் தயார்| Dinamalar

வின்தோயக்-இந்தியாவுக்கு புறப்பட தயாராக உள்ள சிறுத்தை இனத்தைச் சேர்ந்த எட்டு சிவிங்கிகளை அழைத்து வர, புலி உருவத்துடன் கூடிய சிறப்பு விமானம், நமீபியாவை சென்றடைந்துள்ளது.

நம் நாட்டில், சிவிங்கிகள் அழிந்துபோன இனமாக, 1952ல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் மத்திய அரசு, கடந்த ஜூலையில் ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஐந்து பெண், மூன்று ஆண் என, எட்டு சிவிங்கிகளை நன்கொடையாக வழங்குவதாக, நமீபியா அறிவித்தது. இந்த சிவிங்கிகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் திறந்து விடப்பட உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, தன் பிறந்த நாளான நாளை, இந்த சிவிங்கிகளை திறந்து விட உள்ளார்.நமீபியாவில் இருந்து இவற்றை அழைத்து வர, சிறப்பு சரக்கு விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிவிங்கிகள் கூண்டுகள் வைப்பதற்கு ஏற்ப, அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சிவிங்கிகளை அழைத்து வரும் விமானத்தின் முகப்பில், நம் தேசிய விலங்கான புலியின் உருவம் வரையப்பட்டுள்ளது.

இந்த விமானம், நமீபியா தலைநகர் வின்தோயக் விமான நிலையத்தை நேற்று சென்றடைந்தது.இந்த விமானத்தின் புகைப்படத்தை, நமீபியாவுக்கான இந்திய துாதரகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. நமீபியாவில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு விமானம், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரை நாளை காலை வந்தடையும். அங்கிருந்து, ஹெலிகாப்டர் வாயிலாக, மத்திய பிரதேசத்துக்கு, சிவிங்கிகள் பயணம் மேற்கொள்ளும்.

ஆங்கிலத்தில் ‘சீட்டா’ என்றழைக்கப்படும் சிவிங்கிகள், ஆப்ரிக்கா மற்றும் ஈரானில் மட்டுமே தற்போது காணப்படுகின்றன. புல்வெளிக் காடுகள் மற்றும் திறந்தவெளிக் காடுகளில் இவை வாழும்.சிவிங்கி, சிறுத்தை இரண்டுக்கும் இடையே சிறிய வித்தியாசங்களே உள்ளன. சிறுத்தையானது, புலியைப் போன்றது. அதன் உடல் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதன்மேல் கறுப்புத் திட்டுகள் பரந்து காணப்படும்.

ஆனால், சிவிங்கிக்கோ, உடல் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் மேல், கறுப்புப் புள்ளிகள் இருக்கும். மேலும், சிறுத்தையைப் போல் கால் நகங்களை முழுவதுமாக இழுத்துக் கொள்ள சிவிங்கிகளால் முடியாது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.