திருமலை : ஆந்திராவில் அமராவதி தலைநகர் வலியுறுத்தி நேற்று நடைபெற்ற பாதயாத்திரையில் விவசாயிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரது உயிரை காப்பாற்றினர். ஆந்திர மாநில தலைநகர் அமராவதிக்காக முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியின் போது நிலம் வழங்கிய விவசாயிகள் தொடர்ந்து அமராவதியை தலைநகராக அமைக்க வலியுறுத்தி 2வது கட்டமாக நிலம் வழங்கிய விவசாயிகள் அனைவரும் இணைந்து மாநிலம் முழுவதும் மகா பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பாதயாத்திரை நேற்று கிழக்கு கோதாவரி மாவட்டம், கொவ்வூரில் இருந்து ராஜமகேந்திராவரம் சென்று கொண்டிருந்தது. காமன் இந்தியா பாலத்தை கடக்கும் போது விவசாயி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் திரிநாத் மாரடைப்பு ஏற்பட்ட விவசாயிக்கு முதலுதவியான சிபிஆர் செய்தார். அவருடன் மற்ற போலீசாரும் உதவி செய்து முழு முயற்சியுடன் அவரது உயிரை காப்பாற்றினார்.
மாரடைப்பில் மயங்கி விழுந்த விவசாயிக்கு துரிதமாக செயல்பட்டு சிபிஆர் முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய சம்பவம் அங்கிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக மாறி வருவதோடு, காவல்துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வரு
கிறது.