மணிலா: பிலிப்பைன்ஸை தாக்கிய நால்கே புயலுக்கு இதுவரை 72 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸில் நால்கே புயல் வியாழக்கிழமை தாக்கியது. இதனைத் தொடர்ந்து, அங்கு கடுமையான மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டன. கனமழைக்கு பிலிப்பைன்ஸின் தென் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசியதில் வீடுகள் பல சேதமடைந்தன.
கனமழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழைக்கு இதுவரை 72 பேர் பலியாகினர்; 14 பேரைக் காணவில்லை. 33 பேர் காயமடைந்தனர். 7,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்க வக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும், மீட்புப் பணியில் 5,000 வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும் பிலிப்பைன்ஸ் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் வருடத்துக்கு 20 புயல்கள் வரை வீசுகின்றன. இதில் சமீப ஆண்டுகளில் வீசிய மோசமான புயலாக ‘ராய்’ கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் வீசிய ராய் புயலில் 208 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸில் கடந்த 2013-ஆம் ஆண்டு வீசிய புயலில் 6,000 பேர் வரை பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.