புதுடில்லி: பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்தம் செல்லும்’ என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தசட்டத்துக்கு ஆதரவாக மூன்று நீதிபதிகளும், எதிராக இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு குறித்துசட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப் போவதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
40 வழக்குகள்
கடந்த 2019ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சட்டத் திருத்தம், 103வதுஅரசியல் சாசன திருத்தம் என்றழைக்கப்படுகிறது.இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 40 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்தது. கடந்த செப்., 27ல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
தலைமை நீதிபதி யு.யு.லலித் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.இதில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தம் செல்லும் என்று மூன்று நீதிபதிகளும், செல்லாது என்று இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர்.
ஆதரவு
ஐந்து நீதிபதிகள் சார்பில் நான்கு தீர்ப்புகள் வாசிக்கப்பட்டனநீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர், இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளனர். ‘அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை தொடர்ச்சி ௫ம் பக்கம்
இந்த சட்டத் திருத்தம் மீறவில்லை’ என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதே நேரத்தில், தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதி ரவீந்திர பட், எதிர்த்து தீர்ப்பு அளித்துள்ளனர். ‘எஸ்.சி., – எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவில் சேர்க்கப்படாதது சமூக நீதிக்கு எதிரானது’ என்று இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
”இந்த சட்டத் திருத்தம், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை. இடஒதுக்கீடு என்பது உறுதியான நடவடிக்கைகளுக்கான கருவியாகும். அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் சமூக கட்டமைப்புக்கு இது தேவை,” என, நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
”பாரபட்சமானது என்ற அடிப்படையில், இந்த சட்டத் திருத்தத்தை நீக்க முடியாது. பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை உறுதி செய்யவே பார்லிமென்ட் இந்த சட்டத் திருத்தத்தை செய்துள்ளது,” என, நீதிபதி பீலா திரிவேதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
”இந்தச் சட்டத் திருத்தம் செல்லும். இடஒதுக்கீடு என்பது சமூக நீதியை பாதுகாப்பதற்கானது. ஆனால், அது ஒரு தொடர்கதையாக இருப்பது, குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்,” என, நீதிபதி பர்திவாலா குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி ரவீந்திர பட் தனது தீர்ப்பில், ”எஸ்.சி., – எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் போன்ற பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவில் சேர்க்கப்படாதது சமூக நீதிக்கு எதிரானது. அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு எதிரானது,” என, குறிப்பிட்டுள்ளார்.
தலைமை நீதிபதி யு.யு. லலித்தும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தமிழக அரசின் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கின் விசாரணையின்போது, ‘பொருளாதாரத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது’ என, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே வாதிட்டிருந்தார்.
இதற்கிடையே, இந்த தீர்ப்புக்கு தி.மு.க., தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்த வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு, சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நுாற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது. எனினும், தீர்ப்பை முழுமையாக ஆராய்ந்து, சட்ட வல்லுனர்களோடு கலந்து ஆலோசிக்கப்படும்.
சமூக நீதிக்கு எதிரானதான, முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான நம் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எங்கள் முயற்சி : காங்.,
இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோது, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக முதல் முயற்சி எடுக்கப்பட்டது.
இதற்காக, சின்ஹோ கமிஷனை அமைத்தார், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங். கடந்த, 2005ல் துவங்கிய இந்த கமிஷனின் விசாரணை முடிந்து, 2010ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது விரிவாக விவாதிக்கப்பட்டு, 2014ல் பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.ஆனால், அது சட்டமாக்க பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு ஐந்து ஆண்டு எடுத்துக் கொண்டது. காங்கிரஸ் முயற்சியில் இந்த இடஒதுக்கீடு உருவானதால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
சமூக நீதி காக்கப்பட்டுள்ளது
இந்த தீர்ப்பு குறித்து பா.ஜ.,வின் பொதுச் செயலர் பி.எல். சந்தோஷ் கூறியுள்ளதாவது:சமூக நீதியைக் காக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த தொலைநோக்கு முயற்சியை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது சமூக நீதியைக் காக்கும் பா.ஜ., அரசின் சரியான நடவடிக்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்.இவ்வாறு அவர் கூறினார்.
பிராமணர் சங்கம் வரவேற்பு
தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் என்.நாராயணன் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு சட்டப்பூர்வமாக அமல்படுத்தி நடைமுறைப்படுத்தி வரும் முற்பட்டோரில் நலிந்தோருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீடை உறுதி செய்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை சங்கம் வரவேற்கிறது.இந்த வழக்கில் தமிழக அரசு தாங்களே முன்வந்து பங்கு கொண்டதால், இந்த தீர்ப்பை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டப்பூர்வ கடமை தமிழக அரசுக்கு உள்ளது.
இந்த சட்டப்பூர்வமான, 10 சதவீத இட ஒதுக்கீடை கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்த முன்வராத அ.தி.மு.க.,வும், தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க.,வும் தங்களது இட ஒதுக்கீடு கொள்கையை சரிசெய்து கொள்ள, சமன் செய்து கொள்ள இந்த தீர்ப்பு ஒரு நல்வாய்ப்பாகும்.
தமிழக முற்பட்டோர் பட்டியலில் உள்ள, 76 தமிழக ஜாதிகள் பயன்பெறக்கூடிய இந்த 10 சதவீத இட ஒதுக்கீடை தமிழகத்திலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்