
தம்பியின் பேச்சைக் கேட்டு கண்கலங்கிய அல்லு அர்ஜுன்
தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மூன்று மகன்களில் இரண்டாவது மகன் அல்லு அர்ஜுன் அங்கே முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அதேசமயம் அவரது இளைய மகன் தனது அண்ணனைப் போலவே தானும் நடிகராக மாறி சில படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கென மிகப்பெரிய அளவில் பிரேக் கிடைக்காமல் இருந்து வருகிறது. தமிழில் கூட ராதாமோகன் டைரக்ஷனில் கௌரவம் என்கிற படத்தில் நடித்திருந்தார் அல்லு சிரிஷ். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அல்லு சிரிஷ் நடிப்பில் வெளியான ஊர்வசிவோ ராட்சசிவோ என்கிற படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த படம் தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் ரீமேக் ஆகும். கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ராகேஷ் சசி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் அல்லு அர்ஜுனும் கலந்து கொண்டார். மிகப்பெரிய வெற்றியை நீண்ட நாளைக்கு பிறகு ருசித்துள்ள படத்தின் ஹீரோ அல்லு சிரிஷ் இந்த நிகழ்வில் பேசும்போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அவர் பேசப்பேச, கீழே அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருந்த அல்லு அர்ஜுன் நெகிழ்ந்துபோய் கண்கலங்கினார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.