நிலக்கோட்டை: காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் வரும் 11ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளனர். பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி தலைமையில் அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 2018-19 மற்றும் 2019-20 கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிக்கும் 36வது பட்டமளிப்பு விழா வரும் 11ம் தேதியன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.
இதனையடுத்து பல்கலைக்கழக வளாகம், சின்னாளப்பட்டி நான்கு வழிச்சாலை பகுதியில் இருந்து பல்கலைக்கழக விழா அரங்கம் வரை புதிதாக சாலை அமைக்கும் பணிகள், நிகழ்ச்சி நடைபெற உள்ள பல்நோக்கு அரங்கம் பிரமாண்டமாக நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு ஏற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
விழா நடைபெறும் பகுதி பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மதுரை சரக டிஐஜி பொன்னி மற்றும் மதுரை, திண்டுக்கல் – தேனி சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் ஆகியோர் ஹெலிபேட் தளம் முதல் விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கம், பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தனர்