“ `விளம்பரமேனியா' நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!" – அண்ணாமலை சாடல்

ஆவின் பால், மின்கட்டணம், சொத்து வரி உயர்வைக் கண்டித்து ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இன்று பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் கலைவாணி விஜயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசுகையில், “தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஓவொரு பொருளின் விலையையும், வரிகளையும் உயர்த்தி வருகிறது. விலையை உயர்த்துவதில் அமைச்சர்களுக்கிடையே போட்டி நிலவுகிறது. ஆட்சிக்கு வந்ததும் சொத்து வரி, மாநகராட்சியில் குடிநீர் கட்டணம், மற்ற மாநிலங்களைவிட பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஆவின் பொருள்களான பால், ஐஸ்கிரீம் போன்றவற்றின் விலையையும், மின்கட்டணத்தையும் உயர்த்தியிருக்கின்றனர். மண் திருட்டு, கனிம வளத் திருட்டும் அதிகரித்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து அதனால் ஏற்படும் குற்றங்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. இப்போது ஆவின் பால் விலையையும் லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்தியிருக்கின்றனர். கடந்த 16 மாதங்களாக நடைபெறும் தி.மு.க ஆட்சியின் ஒரே சாதனை விலைவாசி உயர்வும், வரி உயர்வும்தான்.  

கூட்டத்தின் ஒரு பகுதி

நம்முடைய முதல்வரைப் போல ஒரு விளம்பர முதல்வரை இந்தியாவிலேயே காண முடியாது. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போகும்போது யாராவது 4 பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தால் அதை விடியோவாக எடுத்து தனது முகநூலில் பதிவிடுகிறார். தன்னைப் பற்றிய அனைத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்ளும் விளம்பர முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். விளம்பர மேனியா என்ற நோய் முதல்வருக்கு வந்துள்ளது. அவர் குடும்பமே கதை, திரைக்கதை எழுதும் குடும்பமாக இருப்பதே அதற்குக் காரணம்.

மயிலாடுதுறையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பார்க்கப்போகும் முதல்வருக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்படுகிறது. தண்ணீரில் முழ்கியுள்ள பயிர்களை பார்க்கப்போகும் முதல்வர் விவசாயத்தை காப்பாற்றுவது போல பேசுகிறார். பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்திவிட்டு, ஆரஞ்சு நிற ஆவின் பாக்கெட் பாலின் விலையை ரூ.12 உயர்த்தியிருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சிக்கு உதாரணமா?
பால் ஊற்றும் விவசாயிக்கு ரூ.35 கொடுத்துவிட்டு, அதனை ரூ.60-க்கு விற்பனை செய்கிறார்கள். இடையில் ரூ.25 எங்கு போகிறது என்றால் அதுதான் திராவிட மாடல் அரசு. விவசாயிகள் ஊற்றும் பாலை விற்பதன் மூலம் 45 சதவிகிதம் கமிஷனாக ஆவின் நிறுவன அதிகாரிகள் பெறுகின்றனர். குஜராத்தில் பால் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அதிகமான விலை கிடைக்கிறது. ஆனால், இங்கு பாலை ஊற்றும் விவசாயிக்கும் லாபம் கிடைக்கவில்லை. அதை விற்பனை செய்யும் ஆவின் நிறுவனத்துக்கும் லாபம் கிடைக்கவில்லை.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை

கடந்த ஆண்டு வரை தினமும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆன நிலையில், இந்த ஆண்டில் 32 லட்சமாக குறைந்துவிட்டது. கடந்த ஆண்டைவிட 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்திருக்கிறது. ஆவினில் பால் கொள்முதல் விலையும் குறைவு. விற்பனை செய்வதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு கிடைக்கும் வருவாயும் குறைவு என்றால் எப்படி ஆவின் நிறுவனத்தால் லாபகரமாக இயங்க முடியும்.

ஆவின் நிறுவனத்தில் சில அரசியல்வாதிகள் புகுந்து கமிஷனுக்காக கொள்ளையடிப்பதால் அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.  பா.ஜ.க செலவில் தமிழகத்தின் அரசியல்வாதிகளை குஜராத்தில் உள்ள அமுல் நிறுவனத்துக்கு அழைத்துச் சென்று காட்டத் தயாராக இருக்கிறோம். அங்குள்ள அமுல் நிறுவனம் எப்படி லாபகரமாக இயங்குகிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். இதைச் சொன்னால், இங்குள்ள பால் வளத்துறை அமைச்சர் நாசருக்கு வாயில் கோளாறு. அதனால்தான் ஸ்டாலினிடம் நிர்வாகக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. பாலுக்கு ஜி.எஸ்.டி கட்டணம் உயர்ந்துவிட்டதாக தவறாகக் கூறுகிறார்கள். பாலில் அதிக கொதிநிலை உள்ள டிலைட் பாலுக்கு மட்டுமே 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக மக்கள் பயன்படுத்தும் பாலுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை.
இப்போது ஆவினில் தினமும் 32 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் ஆகிறது. ஆனால் அமைச்சர் நாசர் 43 லட்சம் லிட்டர் கொள்முதல் ஆகிறது என்று பொய் சொல்கிறார். இதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா” என்றார் காட்டமாக.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.