முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அரசு ஊழியர்கள் அதிருப்தி..!

தேர்தல் அறிக்கையில் கூறியபடி வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு மீது அரசு ஊழியர், ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது. தற்போது திமுக அரசு அமைந்து சுமார் 14 மாதங்களுக்கும் மேல் ஆகி உள்ள நிலையில், மேற்கண்ட வாக்குறுதிகள் நிறைவேறவில்லை. இதை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தின் அவ்வப்போது மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக தேர்தல் அறிக்கையில் புதிய பென்ஷன் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாடு களைவோம், உயர்கல்வி ஊக்க ஊதியம், நிறுத்தி வைத்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்குவோம் என உறுதி அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டாகியும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை வாழ்வாதார மாநாட்டில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தோம்.

கடந்த 3 ஆம் தேதி மாநில அளவில் தர்ணா நடத்தினோம். எங்களது போராட்டம் தொடரும்.

அரசு ஊழியர்களில் சி மற்றும் டி பிரிவுக்கு அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை நியமிக்கும் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திமுக அரசு சரண்டர், அகவிலைப்படியை பறித்து விட்டது. நியாயமான கோரிக்கைக்கு சிறை சென்றவர்களின் தியாகம் வீண் போகாது. 30 அம்ச கோரிக்கையை முன்வைத்து சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.