புதுடெல்லி: சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், ரயில்வேயில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 புதிய வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இயக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. சென்னை ஐசிஎப்.பில இந்த ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. மாதத்துக்கு 7 முதல் 8 ரயில்களை தயாரித்தால் மட்டுமே, இந்த இலக்கை எட்ட முடியும். ஆனால், இப்போது அதை விட குறைவாகவே இந்த ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன.
அடுத்தடுத்து கிடைக்கும் புதிய தொழில்நுட்பங்கள், வசதிகள் இந்த ரயில்களில் சேர்க்கப்பட்டு வருவதால், இதன் தயாரிப்பில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், இந்த ரயில்களை தயாரிப்பதற்கான செலவும் கூடிக் கொண்டே போகிறது. 18 பெட்டிகள் கொண்ட ஒரு வந்தே பாரத் ரயில், முதலில் ரூ.106 கோடியில் தயாரிக்கப்பட்டது. தற்போது, ரூ.110 கோடி செலவாகிறது. புதிய வசதிகள், தொழில்நுட்பங்கள் இணைக்கப்படுவதால், இந்த செலவுத் தொகை ரூ.120 கோடியை எட்டும் நிலை உருவாகி இருக்கிறது.
அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களையும், அடுத்த 3 ஆண்டுகளில் 400 ரயில்களையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் இலக்கு. அதை எட்டுவதற்கு, கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலையிலும் வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு விரைவில் தொடங்க உள்ளது.