நெல்லை: நெல்லை அருகே காதலை கைவிட மறுத்த மகளை கழுத்து நெரித்துக் கொலை செய்த தாய் தானும் தற்கொலைக்கு முயன்று நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே பாலாமடையைச் சேர்ந்தவர் பேச்சி. சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுககனி.
இவர்களது மகள் அருணா (19). கோவையில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். சமீபத்தில் லீவு எடுத்து விட்டு ஊருக்கு வந்தார். இவர் பாலாமடையைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்துள்ளார். அந்த வாலிபர் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனால் அருணா, அவரைத் தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது பெற்றோர் வேறிடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு அருணா மறுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தாய்க்கும், மகளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அருணாவை அவரது தோளில் கிடந்த துப்பட்டாவால் கழுத்தை சுற்றி நெரித்துக் தாய் ஆறுமுககனி கொலை செய்தார். அதன் பின்னர் அங்கு இருந்த மாத்திரைகளையும், ஹேர்டையையும் எடுத்து குடித்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். போலீசார் விரைந்துவந்து ஆறுமுக கனியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.