மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள், பிறந்து 3 நாளே ஆன குழந்தையின் நாக்கிற்கு அடியில் உள்ள நீர் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி உயிரை காப்பாற்றியுள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டிற்கு முன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் குழந்தை கவினுக்கு பிறந்த முதல் நாளிலே நாக்கிற்கு அடியில் நீர் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தை சுவாசிக்கவும், மூச்சிவிடவும் சிரமப்பட்டு உயிருக்குப் போராடியுள்ளது. மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைகள் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.மீனாட்சி சுந்தரி மற்றும் அவரது மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். உயிரை காப்பாற்ற உடனடியாக குழந்தையின் நாக்கின் அடியில் உள்ள நீர் கட்டிய அகற்ற வேண்டிய இருந்தது.
ஏற்கனவே மூச்சிதிணறல், சுவாசப்பிரச்சனை உள்ள இக்குழந்தையின் உடல் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஒத்துழைக்குமா? என்று ஆலோசித்தனர். ஆனால் மாற்று வழியில்லாததால் மருத்துவர்கள் துரிதமாக முடிவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக அக்குழந்தையின் நாக்கின் அடியில் இருந்த நீர் கட்டியை அகற்றி குழந்தையின் உயிரை காப்பாற்றினர். ஆனாலும், அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் நாக்கு கீழ் பகுதியில் ஓட்டிக் கொண்டது. இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை குடல் பகுதிகள் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் மேற்கொள்ளும்போது ஒரு உறுப்பு மற்றொரு உறுப்புகளில் ஒட்டிக் கொள்வது இயல்பு என்றாலும் நாக்கு குழந்தையின் முக்கியமான உடல் உறுப்பு என்பதால் உடனடியாக மற்றொரு அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்யவில்லை.
தொடர்ந்து ஒரு ஆண்டாக அக்குழந்தையை மருத்துவர்கள் உடல்நிலையை கண்காணித்தனர். தற்போது அக்குழந்தைக்கு ஒரு வயதான நிலையில் ஒட்டிக் கொண்ட நாக்கை அதன் கீழ் பகுதியில் இருந்து பிரிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் மீண்டும் அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளனர். தற்போது அக்குழந்தை நலமாக இருப்பதாகவும், உணவுகள் வழக்கம்போல் சாப்பிடுவதாகவும் டீன் ரத்தினவேலு, குழந்தைகள் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் எஸ்.மீனாட்சி சுந்தரி மகிழ்ச்சி தெரிவித்தனர்.