திரைத்துறையைப் பொறுத்தவரையில், ஆர்ட் மற்றும் அதிக பட்ஜெட் கமர்ஷியல் திரைப்படங்களை எடுக்கும் கலைஞர்களிடையே சில முரண்பாடான கருத்துகள் இருப்பது வழக்கம்.
அந்த வகையில் பிரபல ஹாலிவுட் இயக்குநரான குவென்டின் டாரன்டினோ அதிக பட்ஜெட் கொண்ட கமர்சியல் திரைப்படங்களான மார்வெல் மற்றும் டி.சி திரைப்படங்களை விமர்சித்து ஹாலிவுட் திரையுலகம் மார்வெல் மயமாகி வருகிறது என்று பேசியுள்ளார்.
‘ஜாங்கோ அன்செயிண்டு’, ‘தி ஹேட்ஃபுல் எய்ட்’, ‘டெத் ப்ரூஃப்’, ‘கில் பில்’, ‘பல்ப் ஃபிக்ஷன்’, ‘ஜாக்கி பிரவுன்’, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ போன்ற திரைப்படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநராக வலம்வருபவர் ஹாலிவுட் இயக்குநர் குவென்டின் டாரன்டினோ. தன் திரைப்படங்கள் மூலம் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர்.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய டாரன்டினோ, “மார்வெல் கதாபத்திரங்களில் நடித்த பல நடிகர்கள் புகழ்பெற்ற நட்சத்திரங்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் திரைப்பட நட்சத்திரங்கள் இல்லை. ‘கேப்டன் அமெரிக்கா’, ‘தோர்’ போன்ற கதாபாத்திரங்கள்தான் திரைப்பட நட்சத்திரங்கள். இதை நான் மட்டும் சொல்லவில்லை, எனக்கு முன் பலரும் எனது இந்தக் கருத்தைப் பலமுறை இங்கு முன்வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
மேலும், “நான் சிறுவயதில் பைத்தியம் போல் மார்வெல் காமிக்ஸைச் சேகரித்திருக்கிறேன். ஒருவேளை, என்னுடைய இருபது வயதில் இந்தப் படங்கள் வெளிவந்திருந்தால், நான் மிகவும் உற்சாகமாக உணர்ந்திருப்பேன். நான் விரும்பும் படங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும். ஆனால், எனக்குக் கிட்டத்தட்ட 60 வயதாகிவிட்டது. எனவே இப்போது, இந்த வகையான திரைப்படங்களில் எனக்கு ஆர்வம் இல்லை.
நான் முன்வைக்கும் கருத்து என்னவென்றால், பெரிய படங்கள் மட்டுமே இங்கு திரைப்படத்துறையின் அடையாளமாக உருவாக்கப்படும் பிம்பத்தை நான் உடைக்க விரும்புகிறேன். அதுமட்டுமன்றி, இந்த வகையான திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களை உற்சாகப்படுதுகின்றன என்று தயாரிப்பு நிறுவனங்கள் நினைத்துக்கொள்கின்றன” என்று, மார்வெல் மற்றும் டி.சி போன்ற அதிக பட்ஜெட் கமர்ஷியல் திரைப்படங்கள் ஹாலிவுட் திரையுலகை ஆக்கிரமித்துவருவதை விமர்சித்துள்ளார்.

இதற்குமுன் டாரன்டினோ, மார்வெல் திரைப்படத்தை நான் ஒருபோதும் இயக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். ஏனெனில், “அதைச் செய்ய நீங்கள் கூலி வேலை செய்பவராக இருக்க வேண்டும். நான் கூலி வேலை செய்பவன் அல்ல” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குநர் டாரன்டினோ, மார்வெல் பற்றி விமர்சனம் செய்து பேசியது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகிவருகிறது. பலர் அவரின் இந்தக் கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர்.
இதேபோல் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன், “மார்வெல் மற்றும் DC திரைப்படங்களின் கதாபாத்திரங்களைப் பார்த்தால் அதில் யாருக்கு எவ்வளவு வயதானாலும் பரவாயில்லை என்று கல்லூரியில் இருப்பதைப் போலவே செயல்படுகிறார்கள். அதிலுள்ள கதாபாத்திரங்களுக்கு உறவுகள் இருக்கின்றன. ஆனால் அவை உண்மையாக இல்லை. அவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக எதுவும் செய்வதில்லை. அந்தக் கதாபாத்திரங்கள் குடும்பங்கள், உறவுகளை உணர்வதில்லை. இது எப்படி லட்சியங்களையும் ஊக்கத்தையும் அன்பையும் தருவதாக இருக்கும்? இது திரைப்படங்களை உருவாக்குவதற்கான சிறந்த வழி அல்ல என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.