ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களுக்கு, பொருட்கள் வாங்கியது போல் குறுஞ்செய்தி சென்றால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கூட்டுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. 246 கிடங்குகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. நியாய விலைக் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, அரிசி இலவசமாகவும், துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் இந்த பொது வினியோகத் திட்டத்தால், பெரும்பாலான ஏழை எளிய மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். கோடிக் கணக்கான மக்கள் நியாய விலை கடைகளில் பொருட்களை மாதந்தோறும் பெற்றுச் செல்கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில்
போலி பில்
போடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதாவது வாடிக்கையாளர்கள் வாங்காத பொருட்களுக்கும் சேர்த்து பில் அனுப்பப்படுவதாகவும், ஒரு பொருள் கூட வாங்காதவர்களுக்கும் பொருட்கள் வாங்கியது போல் குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாடுகள் எழுந்தன. இது தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் மேல் அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று, இந்த விவகாரம் குறித்து தமிழக கூட்டுறவுத் துறை ரேஷன் கடை ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், பொருட்கள் வாங்காதவர்களுக்கு, பொருட்கள் வாங்கியது போல் குறுஞ்செய்தி சென்றால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், போலி பில் போடும் ஊழியர்கள், உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் ஆகியோரும் இந்த நடவடிக்கையில் சிக்குவார்கள் என்றும், முறைகேடுகளை கண்காணிக்க தவறும் சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை சார்பில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை, குடும்ப அட்டைதாரர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.