குஜராத் மாநிலத்தில், பாரதிய ஜனதா தலைமையிலான அரசு கல்வித் துறையில் நவீன மற்றும் அறிவியில் சார்ந்த மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது.
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், காந்தி நகர் மாவட்டத்தின் தேகாம் நகரில் நடைபெற்ற பேரணியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
குஜராத் பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 33 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. பல மாநிலங்களில் இந்த அளவுக்கு கல்விக்காக பெரிய அளவில் தொகை ஒதுக்கப்படுவதில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநில பட்ஜெட்டில் கல்விக்காக 1,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்று அந்தத் தொகை 33 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது தான் குஜராத் மாநிலம் கல்வியில் கண்டுள்ள வளர்ச்சி. நாங்கள் கல்வியில் கொண்டு வந்துள்ள மாற்றம் குஜராத் மாநில மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக உள்ளது.
பாஜக தலைமையிலான குஜராத் அரசு கல்வித் துறையில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது. காந்தி நகர் பல கல்லூரிகள் மற்றும் பல்கழைக் கழகங்களின் கூடாரமாக மாறி உள்ளது. உலகின் முதல் தடயவியல் துறை சார்ந்த பல்கலைக் கழகம் மற்றும் குழந்தைகள் பல்கலைக் கழகம் குஜராத் தலைநகரில் அமைந்துள்ளது. அதேபோல இந்தியாவின் முதல் ஆற்றல் சார்ந்த பல்கலைக் கழகமும் காந்தி நகரில் அமைந்துள்ளது.
விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சிகளுக்கு வாக்காளர்களாகிய நீங்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.