கள்ளக்குறிச்சி :: மாணவர்களே வராத பள்ளிக்கு தினமும் வந்து செல்லும் தலைமை ஆசிரியர்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கீழைப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட பள்ளிக்கு வராத நிலையில் அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டும் பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வந்தனர். கடைசியாக 2015 முதல் 2018ம் ஆண்டு கால கட்டங்களில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துள்ளனர். அவர்களுக்கென இரண்டு ஆசிரியர்களும் இருந்துள்ளனர்.

இந்த பள்ளியில் சமையலறை இல்லாததால் 2019 ஆம் ஆண்டு முதல் பக்கத்து ஊர் பள்ளியில் இருந்து உணவு சமைத்து கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்தது. நடப்பு கல்வி ஆண்டில் ஆறு மாணவர்களின் பெயர்கள் பதிவேட்டில் இருந்தும் ஒரு மாணவர் கூட பள்ளிக்கு வருவதில்லை. 

இந்த பள்ளியில் படித்த மாணவர்களை அருகில் உள்ள குச்சிக்காடு, பரமாநத்தம், முரார்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாற்றிவிட்டனர். இதுகுறித்து பேசிய பெற்றோர்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததால் தங்களின் பிள்ளைகளை அருகில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு மாற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து உரிய ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.