இயக்குனர் ஹெச்.வினோத் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை போன்ற படங்களை இயக்கிய பின்னர் தற்போது மீண்டும் அஜித்தை வைத்து ‘துணிவு‘ படத்தை இயக்கி வருகிறார். அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த படம் அவர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையப்போகிறது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்தையும் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியார், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், மமதி சாரி மற்றும் சமுத்திரக்கனி போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படம் வங்கி கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது என்று ஏற்கனவே பல தகவல்கள் வெளியானது, மேலும் பஞ்சாபில் நடந்த ஒரு உண்மையான வங்கி கொள்ளை சம்பவம் தான் படத்தின் கதை என்றும் செய்திகள் வெளிவந்தது.
‘துணிவு’ படம் பற்றிய பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் ஹெச்.வினோத் துணிவு படம் குறித்தும், இதற்கு முன்னர் வினோத்-அஜித் கூட்டணியில் வெளியான வலிமை படம் குறித்தும் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். ‘துணிவு’ படம் குறித்து அவர் கூறுகையில், இந்த படத்தை முதலில் குறைந்த பொருட்செலவில் எடுக்கவே நான் விரும்பினேன், அதற்கேற்ப கதையையும் வடிவமைத்தேன். ஆனால் அஜித் சார் இந்த கதையை கேட்டு வியந்து நான் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதாக கூறினார், உடனே நான் படத்தின் தரத்தை உயர்த்திவிட்டேன் என்று கூறியுள்ளார். அடுத்ததாக ‘வலிமை’ படம் குறித்து பேசுகையில், ‘வலிமை’ படத்தில் நிறைய கடின உழைப்பு உள்ளது, படம் வெளியான இரண்டு நாட்கள் வரையில் நான் கொஞ்சம் குழப்பமாக தான் இருந்தேன்.
ஆனால் மூன்றாவது நாள் குடும்பமாக வந்த ரசிகர்கள் இந்த படத்தை விரும்பி பார்த்தனர், இந்த படம் வணிக ரீதியாகவும், கதை ரீதியாகவும் வெற்றிபெற்றது அப்போது உறுதியானது என்று தெரிவித்தார். மேலும் வலிமை படம் குறித்து பேசியவர் பல பெண்களும், குடும்பத்தினரும் என்னை அழைத்து பாராட்டினார்கள், பல அரசு கொள்கைகளுக்கும் இந்த படம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியாக தெரிவித்தனர் மற்றும் இப்படத்தை பார்த்துவிட்டு போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்தும் முதல்வர் பேசினார் என்று இயக்குனர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.