திருவாரூர்: “தமிழ்நாட்டில் விவசாயிகளை மொத்தமாக அழித்து, நிர்கதியாக்கி, ஊரைவிட்டு விரட்டி, அவர்களை அகதிகளாக்கிவிட்டு தொழிற் வளர்ச்சி என்றால், யாருக்காக இந்த தொழிற் வளர்ச்சி என்ற கேள்விதான் வருகிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நேற்று நெய்வேலியில் நடந்த பிரமாண்டப் பேரணியில் ஒரு 25 ஆயிரம் பேர் மக்கள் கலந்துகொண்டனர். என்எல்சி நிர்வாகம் நிலத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். உரிய இழப்பீடு கொடுத்த பின்னர்தான் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதேபோல், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கின்றபோது, அங்கிருக்கும் விவசாயிகள், கிராம மக்கள் நிலத்தை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தொழிற்சாலை, தொழில் வசதிகள் தேவையா என்றால் தேவைதான். ஆனால், அதற்காக விவசாயிகளை மொத்தமாக அழித்து, நிர்கதியாக்கி, அவர்களை ஊரைவிட்டு விரட்டி, அவர்களை அகதிகளாக்கிவிட்டு தொழிற் வளர்ச்சி என்றால், யாருக்காக இந்த தொழிற் வளர்ச்சி என்ற கேள்விதான் வருகிறது. எனவே, தமிழக முதல்வர் இதில் நிதானமாக அணுகுமுறையை கையாள வேண்டும்” என்று அவர் கூறினார்.