
தென்னிந்திய நடிகைகளை அரசு புறக்கணிக்கிறது: ஜெயசுதா குற்றச்சாட்டு
தெலுங்கில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் பாலகிருஷ்ணா நேரடி சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஜெயசுதா மத்திய அரசு தென்னிந்திய நடிகைகளை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ளனர். அவர் ஒரு அற்புதமான நடிகை. ஆனாலும் கங்கனா 10 படங்களுக்குள் மட்டுமே நடித்து இந்த விருதை பெற்று இருக்கிறார். ஆனால் என்னை போன்ற பலர் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் அரசால் அங்கீகரிக்கப்படாமலேயே இருக்கிறோம்.
40 படங்களுக்கு மேல் இயக்கி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கும் இயக்குனர் விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற பாராட்டுகள் கிடைக்கவில்லை. தென்னிந்திய நடிகைகளை அரசு அங்கீகரிக்காமல் அரசு புறக்கணித்து வருவது வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு ஜெயசுதா கூறியுள்ளார்.
தமிழில் 1970களில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்தவர் ஜெயசுதா. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மலையாளம், இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.