புதுக்கோட்டை சாதிய வன்கொடுமை வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “புதுக்கோட்டை இடையூரில் அருந்ததியர் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வு செய்த போது அப்பகுதியில் இரட்டைக்குவளை முறை வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை பல கிராமங்களிலும் இதுபோன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.

ஆகவே, புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.” என கோரியிருந்தார்.

இன்று காலை இந்த வழக்கை அவசர வழக்கமாக எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார்

அரசு தரப்பில், “இரட்டைக்குவளை, கோவிலில் அனுமதிக்காதது மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலத்துடன் சாக்கடை நீர் கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரட்டைக்குவளை, கோவிலில் அனுமதிக்காதது தொடர்பாக 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலத்துடன் கழிவு நீர் கலந்தது தொடர்பாக நபர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.” என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.