பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்பதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள ஏதுவாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் நாளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ள நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு சாதாரண நாட்களில் 1500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது 3800 ரூபாயாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஆம்னி பேருந்து கட்டண நிர்ணயம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.