சென்னை தி.நகர் ஜி.என் செட்டி ரோடு பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக சுகுமார் (50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2019-ம் ஆண்டில் வங்கியில் தணிக்கை செய்தபோது வங்கியின் மனித வள நிர்வாக மேலாளராகப் பணியாற்றிய ஆனந்தராஜ் மற்றும் சிலர் முறைகேடு செய்ததைக் கண்டுபிடித்தார். பின்னர் இது குறித்து சுகுமார், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முன்னாள் மனித வள நிர்வாக மேலாளர் ஆனந்தராஜ், என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சக வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களுடன் சேர்ந்து 36,29,246 ரூபாய் முறைகேடு செய்தது தெரியவந்தது. அது தொடர்பாக போலி ஆவணங்கள், ரசீதுகளை அவர் வங்கியில் கொடுத்து வங்கிக்கு இழப்பையும் ஏற்படுத்தியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆனந்தராஜை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இன்னும் நான்கு பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.