IND v SL: அர்ஷ்தீப்பின் கட்டுகடங்கா நோ-பால்களும், கேப்டன் ஹர்திக்கின் யோசனையற்ற முடிவுகளும்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.

டாஸை வென்ற பாண்டியா சேஸிங்கைத் தேர்ந்தெடுத்ததே ஆச்சரியமளித்தது. ஏனெனில் இங்கே பெரும்பாலும் அணிகள் ஸ்கோரை டிஃபெண்ட் செய்திருந்தன. பனிப்பொழிவைக் காரணம் காட்டியவர் பின் அக்களத்தின் வின்னிங் ரெக்கார்ட் தெரியாது என்றதும் வேடிக்கையாகவே இருந்தது.

Toss

துணிச்சலுக்கும் அசட்டுத் துணிச்சலுக்கும் நூலிழையில்தான் வேறுபாடு. இந்த இரு முரணுக்கும் நடுவில்தான் பாண்டியாவின் இது போன்ற சில முடிவுகள் ஊசலாடுகின்றன. அதற்கும் மேலாக ஒரு அணியின் பயிற்சியாளரும் கேப்டனும் இதுகுறித்து விவாதித்து அதற்கான திட்டங்களையும் வகுக்காமலா இருந்தார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

சென்ற போட்டியில் போராடித் தோற்றிருந்த இலங்கை இப்போட்டியில் கட்டுக்கடங்கா எழுச்சியோடு திரும்பியிருந்தது. ஸ்பின்னர்களை எதிர்கொண்ட போதும் உம்ரான் மாலிக்கின் அதிவேகத்தாலும் நடுவில் கொஞ்சம் தடுமாற்றத்தைச் சந்தித்திருந்தாலும் இலங்கையின் ரன்ரேட் சற்றே குறைந்ததே ஒழிய மொத்தமாக சரியவில்லை.

இருநாள்கள் இடைவெளியில் காட்சிகள் 180 டிகிரியில் மாறும் அதிசயம் கிரிக்கெட்டுக்குப் புதிதல்ல, இப்போட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல.

சென்ற போட்டியில் பவர்பிளேயில் வெறும் 35 ரன்களை மட்டுமே எடுத்திருந்த இலங்கை இப்போட்டியில் அத்தவற்றை முதலிலேயே சரிசெய்ய முடிவுசெய்து ஆட்டத்தில் தீப்பறக்க வைத்தது. 47 ரன்கள் 4 ஓவர்களிலேயே வந்துவிட்டது.

பாண்டியா வீசிய முதல் ஓவர் உருவாக்கிய அழுத்தத்தை இரண்டாவது ஓவரிலேயே ஹாட்ரிக் நோ பால்களை வீசி அர்ஷ்தீப் அமிழ்ந்து போக வைத்தார்.

Arshdeep

நிஷாங்காவின் ஆட்டம் தடுமாற்றமாக இருந்தாலும் மெண்டீஸ் அதிரடியாக ஆடி அரை சதமும் கடந்தார். அவரது ஒருசில ஷாட்டுகள் கட்டுப்பாடின்றி இருக்க, ஒருசில பந்துகள் எட்ஜ் வாங்கியோ மிஸ்ஹிட்டிலோ பவுண்டரிக்குப் போனது. இருப்பினும் அவர்களது நோக்கம் மிகத்தெளிவாக ரன்களைச் சேர்ப்பதில் இருக்க அதில் வெற்றியும் பெற்றனர்.

பாண்டியா சுதாரித்து ஸ்பின்னர்களைக் கொண்டு ரன்ரேட்டைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார். அக்ஸர் – சஹாலின் ஸ்பெல்கள் ஓரளவு கைகொடுத்தன. ஓப்பனர்களையும் அவர்கள்தான் காலிசெய்தனர்.

ராஜபக்ஷவை முன்கூட்டி இறக்கிய முடிவும் இலங்கைக்குக் கைகொடுக்காமல் போனது. 13-வது ஓவர் வரை, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 184 ஸ்ட்ரைக்ரேட்டில் ரன்குவித்தவர்கள் ஸ்பின்னர்களிடம் 89 ஸ்ட்ரைக்ரேட்டோடு சற்றே மடங்கினர். இருப்பினும் இதன்பிறகு ரன்ரேட் சற்றே ஏறுவதை அசலங்கா உறுதி செய்தார். உம்ரானின் அதிவேகம் அங்கே இந்தியாவை மீட்க சற்றே முயன்றது. அசலங்கா மற்றும் ஹசரங்கா ஆகிய இருவர்களது விக்கெட்டுகளையும் உம்ரான் அடுத்தடுத்த பந்துகளில் எடுத்தார். ஆனால் ஆட்டத்தின் திருப்புமுனையே அங்கேதான் ஆரம்பித்தது.

தனது கடைசி நான்கு டி20 போட்டிகளில் 45, 33*, 74*, 47* என நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்த ஷனாகா இப்போட்டியில் அற்புதமான ஒரு கேப்டன்ஸ் இன்னிங்ஸை ஆடினார். இந்தியாவின் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்களான உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் மற்றும் ஷிவம் மவி ஆகிய மூன்று பேரின் பந்துகளையுமே சூறையாடினார்.

Shanaka

போதாக்குறைக்கு அர்ஷ்தீப் வீசி அவர் அடித்த லோ ஃபுல் டாஸ் லாங் ஆனில் சூர்யாவிடம் கேட்ச் ஆக அதைக்கண்டு ரசிகர்களின் உற்சாகம் சற்றே மேலெழுவதற்குள் அது நோபால் என்ற அறிவிப்பு வந்து எல்லாவற்றையும் குலைத்துப் போட்டது.

ஃபுல் ஃபார்மில் இருந்த ஷனாகாவை யாராலுமே கட்டுப்படுத்த முடியவில்லை. அர்ஷ்தீப்பின் பந்தில் அவர் அடித்த ஸ்கூப் ஷாட் எல்லாம் அவ்வளவு எழில் பொருந்தி இருந்தது. 20 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஷனாகா டி20-ல் அதிவேகமாக அரைசதம் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

மெண்டீஸ் தொடங்கிவைத்து அசலங்க தூக்கிப் பிடித்த இலங்கை இன்னிங்ஸின் மைலேஜை இறுதி ஓவர்களில் ஆட்டங்காட்டிய ஷனாகா எகிற வைக்க 206 ரன்களை இலங்கை எளிதாக எட்டியது. இதில் 10 பவுண்டரிகளும், 14 சிக்ஸர்களும் அடங்கும் என்பதுவும் இந்திய பௌலர்களை இலங்கை பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கியதற்கான சான்றுகள்.

207 ரன்களை எட்டவேண்டுமென்ற பதற்றம் முற்றுகையிட மனதளவில் இந்திய பேட்ஸ்மேன்களை அதுவே தொடக்கத்தில் முடக்கியது. முதல் ஐந்து ஒவர்களுக்குள்ளேயே நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்ததற்கு இதுவும் ஒரு காரணம். சென்ற போட்டியில் இலங்கை ஸ்பின்னர்கள் சுழல் ஜாலம் காட்டினர். அதற்கு மாற்றாக இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்பின்னர்களுக்காக காத்திருக்காமல் பவர்பிளே தங்களுக்கான தளம் என நிரூபித்தனர்.

கொஞ்சமும் போராட்டமின்றி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வெளியேற 35/4 என இந்தியா தடுமாற வேண்டிய நிலை ஏற்பட்டது. உண்மையில் இடைவெளியில் தங்களது இன்னிங்க்ஸ் எப்படிக் கட்டமைக்கப்பட வேண்டுமென்றதை இந்தியா திட்டமிடாமல் இறங்கியிருந்ததுதான் காரணம். கில்லின் தவறான ஷாட்டிலிருந்து பாண்டியா ஆட்டமிழந்ததுவரை எல்லாமே அதன் பிரதிபலிப்பாகவே இருந்தது. ஒருகட்டத்தில் இந்தியா 10 ஓவர்களுக்காவது தாக்குப்பிடிக்குமா, 100 ரன்களையாவது எட்டுவார்களா என்ற அளவிற்கு இலங்கையும் பந்துவீச்சில் மிரட்டியது.

Surya & Axar

பத்து ஓவர்களுக்குள் பாதிக்கூடாரமே காலியாகி இருந்தாலும் பொதுவாக சூர்யகுமார் இருக்கும்வரை ரசிகர்களின் நம்பிக்கை திவளைகள் முற்றிலுமாக வற்றிவிடாது. ஆகவே அவரிடமிருந்து சில வண்ணமயமான ஷாட்களைக் காணலாம் என ரசிகர்கள் காத்திருக்க எதிர்பாராத ஒரு கண்ணிவெடி எதிர்முனையில் இருந்து வெடிக்கத் தொடங்கியது. அக்ஸர் படேலுக்கும் ஆச்சரியங்களுக்கும் எப்போதுமே ஒரு விநோத தொடர்புண்டு. பலநேரங்களில் அணியை மீட்பராகிக் கரை சேர்த்திருக்கிறார். இப்போட்டியிலும் அதுவே நடந்தது.

போன போட்டியின் இறுதி ஓவரில் சூழலின் மொத்த வெப்பத்தையும் தாங்கி இந்தியாவின் பக்கம் வெற்றியைச் சேர்த்திருந்த அதே அக்ஸர் இப்போட்டியிலும் அப்படியொரு துரித நடவடிக்கையில் ஈடுபட்டார். ஹசரங்காவின் பந்தில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர் எல்லாம் வேறு ரகம். அரங்கத்தை மொத்தமாக அதிர வைத்தது அவரிடமிருந்த வெளிப்பட்ட ஒவ்வொரு பெரிய ஷாட்டும். 20 பந்துகளில் அடித்த அரைசதம் ஷனாகாவின் இன்னிங்ஸிற்குப் பதிலடி கொடுத்ததைப் போலிருந்தது. அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சியால் சற்றே பொறுமையாக ஆடிய சூர்யாவும் கொஞ்சம் கொஞ்சமாக தனது அசல் சாயலை வெளிப்படுத்தத் தொடங்கினார். முதல் 26 பந்துகளில் 29 ரன்களை மட்டுமே எடுத்திருந்தவர் ஆட்டமிழப்பதற்கு முன் அடுத்த 10 பந்துகளில் 22 ரன்களைக் குவித்தார்.

12-வது ஓவரிலேயே சூர்யாவை ரன்அவுட் வாயிலாக ஆட்டமிழக்க வைத்து இக்கூட்டணியை முறிக்கக் கிடைத்த வாய்ப்பை இலங்கை நழுவவிட்டிருந்தது. முதல் 10 ஓவர்களில் 64 ரன்களை மட்டுமே எடுத்திருந்த இந்தியா அடுத்த 5 ஓவர்களிலேயே இலங்கையை விய(ர்)க்க வைத்து 75 ரன்களை எடுத்தது. மதுஷங்கா சூர்யாவின் விக்கெட்டை வீழ்த்தியதுதான் இலங்கையை சற்றே மூச்சுவிட வைத்தது. ஆனாலும் அக்ஸர் அப்போதும் தளர்ந்து விடவில்லை. ஷிவம் மாவியும் துணைநிற்க அதே ரிதத்தோடு தொடர்ந்து ஆடினார். அவுட் ஆஃப் சிலபஸில் வந்த ஷிவமும் சர்ப்ரைஸ் தந்தார். உண்மையில் அவர் பேட்டிங் செய்த முதல் சர்வதேச போட்டி இது. இருப்பினும் அந்த சுவடே தெரியாமல் தடம் பதித்தன அவர் அடித்த சிக்ஸர்களும் பவுண்டரிகளும். போன போட்டியில் பந்துவீச்சில் தன்னை நிரூபித்தவர் இப்போட்டியிலோ பேட்டிங்கிலும் நிருபித்துள்ளார். உண்மையில் இவர்களுக்கிருந்த முனைப்பில் ஒரு பாகமேனும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இருந்திருந்தால் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம்.

5 விக்கெட்டுகள் விழுந்து விட்டன இனி 200 ரன்களை எட்ட முடியுமா, போராட்டம் வீணா என்ற எந்த சந்தேகமுமின்றி ஒவ்வொரு ஓவரையும் அக்ஸர் அணுகியதுதான் சிறப்பாக இருந்தது. இறுதிவரை போராடிய அந்த மனப்பாங்குதான் பிரம்மிப்பூட்டியது.

இறுதி ஓவரில் 21 ரன்கள் தேவையென்ற நிலையில் ஹசரங்காவுக்கு மட்டுமே ஒரு ஓவர் மிஞ்சியிருந்த நிலையில், ரிஸ்க் எடுக்காமல் ஷனாகா தானே பந்து வீசியது ஸ்மார்ட் மூவாக மாறியது. இரண்டு விக்கெட்டுகளை எடுத்ததோடு அதனை டிஃபெண்ட் செய்யவும் அதுவே காரணமானது.

Arshdeep

16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றிருக்க டாப் ஆர்டரின் சொதப்பலும் காரணம்தான் என்றாலும் உதிரியாகத் தரப்பட்ட ரன்களும் அர்ஷ்தீப்பின் நோ பால்களும் முக்கியக் காரணம்.

2 ஓவர்களை மட்டுமே வீசிய அவர் 37 ரன்களைத் தராமல் இருந்திருந்தால் வெற்றி இந்தியாவுக்கு எட்டக்கூடியதாக இருந்திருக்கும். ஹர்சலுக்கு மாற்றாக வந்தவர், ஹர்சல் ஏற்படுத்தியதை விட அதிகமான சேதாரத்தைத் தந்ததுதான் கொடுமை.

பாண்டியாவின் சில மோசமான நகர்வுகள் தோல்விக்கு வரவேற்புரை வாசித்தது என்றால் ஷனாகாவின் சில சரியான நகர்வுகள் இலங்கைக்கு தொடரை சமன்செய்வதற்கான வாய்ப்பை அளித்தது. பாண்டியா இன்னமும் கூடுதல் கவனத்தோடும் முன் யோசனைகளோடும் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கான அத்தாட்சி இப்போட்டி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.