உலகிலேயே முதன்முறையாக சவூதி அரேபியாவின் ரியாத் பகுதியில் ஒட்டகங்களுக்கென ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது. டெட்டாமேன் அல்லது ரெஸ்ட் அஸ்ஸுர்டு (Tetaman/ Rest Assured) என அழைக்கப்படும் இந்த ஹோட்டலுக்கு ஒட்டகம் வளர்ப்பவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒட்டகங்களுக்கு இந்த ஹோட்டலில் என்ன மாதிரியான சேவைகள் வழங்கப்படும் என்பதைக் குறித்து `சவூதி ஒட்டக சங்கத்தின்’ பேச்சாளர் படமெடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “120 ஹோட்டல் அறைகளில் ஒட்டகங்களுக்கான சேவைகள் வழங்கப்படுகிறது. ஓட்டகங்களுக்கான சேவைகள் மற்றும் அறைகளைப் பராமரிக்கும் வேலையைச் செய்ய 50 நபர்கள் வேலைக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
உலகிலேயே முதன்முறையாக இந்த ஹோட்டலில் தான் ஓட்டகங்களுக்கான சேவைகள், உணவு, சூடான பால், ஒட்டக பராமரிப்பு போன்றவை வழங்கப்படுகிறது. ஒரு இரவு இங்குத் தங்குவதற்கான செலவு 400 சவூதி ரியால்ஸ் (இந்திய மதிப்பில் 8,685 ரூபாய்)” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஹோட்டலுக்கு வந்த ஒட்டக உரிமையாளரான உமைர் அல் கஹதானி என்பவர் கூறுகையில், “ ஹோட்டலின் இந்த யோசனை அற்புதமானது. ஒட்டக உரிமையாளர்கள் மற்றும் சங்க அதிகாரிகளுக்கு இது வசதியாக உள்ளது. ஒட்டகங்கள் அவற்றின் அறைகளுக்குள் நுழைவதற்கு முன்பு பரிசோதிக்கப்படுகிறது. ஓட்டங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கும்பட்சத்தில், அவற்றை ஹோட்டலில் விட்டுவிட்டு வேறொரு ஒட்டகத்தை எடுத்துச் செல்ல முடியும். அரேபிய உலகில் ஓட்டகங்களுக்கென உருவாக்கப்பட்ட `5 – ஸ்டார் ஹோட்டல்’ என்றே நான் சொல்லுவேன்.

ஒட்டகங்களை மிகவும் நல்லவிதமாகப் பராமரிப்பதால், ஹோட்டல் விதிக்கும் கட்டணத் தொகை பெரிதாகத் தெரியவில்லை. ஒட்டகங்களுக்கான அனைத்து சேவைகளும் இங்கு வழங்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒட்டக உரிமையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, 40 நாட்களுக்குத் `ஒட்டகத் திருவிழா’ நடைபெறும். டிசம்பர் 1-ம் தேதி ரியாத்தில் தொடங்கிய இத்திருவிழாவைக் காண உலகெங்கிலும் இருந்து லட்சக் கணக்கான பார்வையாளர்கள் வருவதுண்டு. இந்த சமயத்தில் ஒட்டகங்களைப் பராமரிக்கும் ஹோட்டலுக்கு, உரிமையாளர்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.