புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைவத் தலைவர் செல்வம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
புதுச்சேரி மணவெளி தொகுதி பாஜக எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான செல்வத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர், அருகிலுள்ள புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அனைத்து மருத்துவப் பரிசோதனைகளையும் எடுத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஓரிரு நாட்கள் சிகிச்சைக்குப்பிறகு வீடு திரும்பினார்.
இந்நிலையில், சட்டப்பேரவை தலைவர் செல்வத்துக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மருத்துவமனைக்கு நேரில் சென்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்தை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவர், நலமுடன் இருப்பதை அறிந்து பூரண நலம்பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இது தொடர்பாக சட்டப்பேரவை செயலக வளாகத்தில் விசாரித்தபோது, ‘‘வழக்கமான பரிசோதனைக்காக சட்டப்பேரவைத் தலைவர் சென்னை தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார். நாளை வீடு திரும்புவார்.’’ என தெரிவித்தனர்.