சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றிய நிகழ்வு குறித்து முதல்வர் அனுப்பிவைத்த புகார் கடிதத்தை மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 12-ம் தேதி முதல்வர் உத்தரவின் பேரில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பான முதல்வர் ஸ்டாலினின் கடிதத்தை அளித்தனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய கடிதம், மத்தியஅரசுக்கு அதாவது, உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசுத் தலைவரால் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் காலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஆளுநரைப் பொறுத்தவரை, கடந்த ஜன. 9-ம் தேதி நிகழ்வுதொடர்பாக அனைத்து விவரங்களையும் அன்றே, மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார். சட்டநிபுணர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக, டெல்லியில் அவருக்கு தெரிந்த மூத்த வழக்கறிஞர்களுடனும் ஆலோசித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காசியாபாத்தில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர், அதன்பிறகு, நேற்று உள்துறை அமைச்சக அதிகாரிகளையும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. நேற்று மாலை அவர் டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார்.