புதுடெல்லி: புதிய இந்தியா, புதுப்பிக்கப்பட்ட திறனுடன் நிரப்பப்பட்டுள்ளதாகவும், நமது ஆயுதப்படையை வலுப்படுத்துவதுடன், தற்சார்பை அடைவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
அடிப்படைப் பயிற்சியை தொடங்கியுள்ள முப்படையின் அக்னி வீரர்களின் முதல் குழுவினருடன் காணொலி காட்சி வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியது: “அக்னி பாதை திட்டத்தின் முன்னோடிகளாக திகழும் அக்னி வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது ஆயுதப்படையை வலுப்படுத்தவும், அதன் எதிர்காலத்தை தயார் செய்யவும், இந்த முன்னோடி கொள்கை முக்கியத்துவம் பெற்று விளங்கும்.
இளைய அக்னி வீரர்கள் ஆயுதப்படையை மேலும் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாகவும் ஆக்குவார்கள். புதிய இந்தியா, புதுப்பிக்கப்பட்ட திறனுடன் நிரப்பப்பட்டுள்ளதாகவும், நமது ஆயுதப்படையை வலுப்படுத்துவதுடன், தற்சார்பை அடைவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
21-ம் நூற்றாண்டில் போரிடும் வழிகள் மாற்றம் அடைந்து வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட வீரர்கள் நமது ஆயுதப்படையில் முக்கியப் பங்கு வகிப்பார்கள் . குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையினர் இந்த திறனை பெற்றுள்ளனர். வருங்காலத்தில் நமது ஆயுதப்படையில் அக்னி வீரர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
கடற்படையில் இணைந்து பெருமை சேர்த்துள்ள மகளிர் அக்னி வீரர்கள் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். முப்படையிலும் மகளிர் அக்னி வீரர்களை காண்பதை தாம் எதிர்நோக்கி இருக்கிறோம். ஆயுதப்படையின் பல்வேறு பிரிவுகளில் மகளிர் முன்னிலை வகிக்கின்றனர். சியாச்சின் பகுதியில் மகளிர் வீரர் பணியமர்த்தப்பட்டது மற்றும் நவீன போர் விமானங்களை மகளிர் ஓட்டுவதே இதற்கு உதாரணம்.
பல்வேறு பிராந்தியங்களில் பணி கிடைத்ததன் மூலம், பல்வேறு அனுபவங்களை பெறும் வாய்ப்பு மகளிருக்கு கிடைத்துள்ளது. பல மொழிகள் மற்றும் கலாச்சாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்கும் வாய்ப்பை அக்னி வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டுப்பணி மற்றும் தலைமைத்துவ திறன் அவர்களது ஆளுமையில் மேலும் புதிய பரிணாமத்தை அளிக்கும். தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் திறம்பட செயல்படும் அதேநேரத்தில் புதிய வழிமுறைகளை கற்றுக்கொள்ளுங்கள்” என்று அக்னி வீரர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.
இளையோர் மற்றும் அக்னி வீரர்களின் திறனைப், பாராட்டிய பிரதமர், 21-ம் நூற்றாண்டில் நாட்டுக்கு அவர்கள் தலைமை தாங்குவார்கள் என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.