ஸ்ரீநகர்: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரில் நடைபெறுவதில் பாதுகாப்பு பிரச்சினை ஏதும் இல்லை என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் கடைசி கட்டம் தற்போது ஜம்மு காஷ்மீரில் தொடங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாகச் சென்று பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீருக்குள் நேற்று மாலை நுழைந்தது.
குளிரை தாங்கும் உடை அணிந்த ராகுல்: ஜம்முவின் கத்துவா நகரில் இன்று காலை 7 மணிக்கு யாத்திரை தொடங்குவதாக இருந்தது. கடும் பனிபொழிவு காரணமாக 75 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. இந்திய ஒற்றுமை யாத்திரையில் இதுவரை வெறும் டி ஷர்ட் மட்டும் அணிந்திருந்த ராகுல் காந்தி, முதல் முறையாக இன்று குளிரை தாங்கும் உடையை அணிந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டார். அவரோடு, சிவ சேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த யாத்திரை வரும் 30ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைய இருக்கிறது.
பாதுகாப்புக்கு பிரச்சினை ஏதும் இல்லை: இந்நிலையில், ஸ்ரீநகரில் நடைபெற்ற, இடம்பெயர்ந்த அரசு ஊழியர்களுக்கான வீடுகள் கட்டும் திட்டத்தின் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்ட அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஷாவிடம், இந்திய ஒற்றுமை யாத்திரைக்கான பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ”ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புடன் நடைபெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, யாத்திரைக்கு பாதுகாப்பு சார்ந்து பிரச்சினைகள் ஏதும் இல்லை” என தெரிவித்தார்.