“238 வாக்குச்சாவடிகள்; தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்கும் வகையில் கேமரா இணைப்பு” – ஈரோடு ஆட்சியர்

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 52 இடங்களில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேரும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 பேர் உள்ளனர். தேர்தல் தினத்தன்று 238 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது. வாக்குப்பதிவு அன்று பொதுமக்கள் சிரமம் இன்றி வாக்களிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு

மேலும் அவர், “வாக்குச்சாவடி மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி வாக்களிக்கும் வகையில் சாய்வுதள பாதைகள் அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தேர்தல் நடைபெறும் நாளில் மத்திய அரசு ஊழியர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம்  கண்காணிக்கப்படுவர்.
இதுவரையிலும் கிழக்கு தொகுதியில் 20 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என  கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் தினத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவர்.

வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிகளில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகளை மாவட்ட தேர்தல் அதிகாரி கண்காணிக்கும் வகையிலும், தமிழக தேர்தல் அதிகாரி கண்காணிக்கும் வகையிலும், இந்திய தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்கும் வகையிலும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் மூன்று நிலை கண்காணிப்புக் குழுக்கள், மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணமோ, ரூ.10,000-க்கு மேல் பரிசுப் பொருட்களையோ உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும். ரூ.10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்ய நேர்ந்தால் நிலை கண்காணிப்பு குழுவினர் வழக்குப் பதியாமல் வருமானவரித் துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனங்களின் வாகனங்கள், வங்கி இருப்புக்கான பணத்தை கொண்டு சென்றாலும் அதற்கு உரிய அதிகாரிகளின்  அனுமதி கடிதம் பெற்று அதை உடன் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு கடிதம் இல்லாதபட்சத்தில் அந்தத் தொகை பறிமுதல் செய்யப்படும்.

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பேட்டி

வாக்காளர்களைக் கவரும் வகையில் சேலை, வேட்டி, டீ-சர்ட் போன்றவை கொண்டு சென்றாலும் பிரசார கூட்டத்தில் காகித தொப்பி, மாஸ்க், துண்டு, ஸ்டிக்கர், பேட்ஜ் போன்றவை வழங்கினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் (ஐஆர்டிடி) வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்தும், அதற்கான இடங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது தொடர்பான எங்களது பரிந்துரையை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைப்போம். அதன் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து இறுதி முடிவு செய்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.