மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…? – பாஜக அடிக்கும் திடீர் பல்டி

Old Pension Scheme: 2004ஆம் ஆண்டு கைவிடப்பட்ட, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தற்போது தெரிவித்து வருகின்றன. மேலும், காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதை அமல்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், பழைய ஓய்வூதிய திட்டம் அரசின் மீது கடுமையான சுமையை ஏற்றும் என பாஜக அதனை எதிர்த்து வருகிறது. இருப்பினும், சில தலைவர் அதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வாய்ப்பில்லை என மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா – பாஜக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்,”பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எதிர்மறையாக ஏதும் நாங்கள் எண்ணவில்லை. நிதி மற்றும் அதுசார்ந்த துறை வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளோம். என்ன முடிவாக இருந்தாலும், அது நீண்ட காலத்திற்காக இருக்கமே அன்றி, குறுகிய காலத்திற்காக இருக்காது. 

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அவர்கள் பேச மட்டுமே செய்வார்கள். ஆனால், தற்போதைய ஓய்வூதிய திட்டத்தை விடுத்து, பழையதற்கு மாற்ற எங்களால் மட்டுமே முடியும். அவர்களால் முடியவே முடியாது” என்றார். தற்போது, ஔரங்காபாத் டீச்சர்ஸ் தொகுதியில் வரும் ஜன. 30ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன் பரபரப்புரையில் ஆளும் தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பாஜக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, தேவந்திர ஃபட்னாவிஸ்,”பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு மீண்டும் கொண்டு வராது. இதன் மூலம் மாநில அரசின் கருவூலத்திற்கு 1.1 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி, 20 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கும். ஆனால், இதன் நிதி சுமை முழுவதுமாக அரசாங்கத்தின் மீது இருந்தது, ஊழியர்களிடமிருந்து எந்த நிதியும் வசூலிக்கப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், அரசாங்கம் மற்றும் ஊழியர்கள் இருவரும் சம்பளத்தில் முறையே 10 மற்றும் 14 சதவிகிதத்தை ஓய்வூதியம் நிதிக்கு பங்களிக்கின்றனர். இதனை பின்னால் எடுத்துக்கொள்ளலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.