லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமின்| Union ministers son gets bail in Lakhimpur Gari violence case

புதுடில்லி, லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு, எட்டு வாரம் இடைக்கால ‘ஜாமின்’ வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

விவசாயிகள் போராட்டம்

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில், 2021 அக்., 3ம் தேதியன்று, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த கார், போராட்டக்காரர்கள் மீது மோதியது.

இதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் காரில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.

இதில், இரு பா.ஜ., தொண்டர்கள் மற்றும் கார் ஓட்டுனர் உயிரிழந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த லக்கிம்பூர் வன்முறையில் மொத்தம் 8 உயிர்கள் பறிபோனது.

விபத்து ஏற்படுத்திய காரில், உ.பி.,யைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்தார்.

இதை தொடர்ந்து, ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் கொலை, குற்றவியல் சதி செய்ததாக விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, கடந்த மாதம் விசாரணையை துவக்கியது.

இதற்கிடையே, ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமின் மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்ததை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

விசாரணை

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிஷ் மிஸ்ராவுக்கு எட்டு வாரம் இடைக்கால ஜாமின் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த காலகட்டத்தில் அவர் உ.பி., புதுடில்லி ஆகிய இடங்களில் தங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த எட்டு வார காலத்தில் வழக்கின் சாட்சிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிரட்டுவது, கலைப்பது போன்ற செயல்களில் குற்றம்சாட்டப்பட்டவரோ, அவரது குடும்ப உறுப்பினர்களோ, அவரது ஆதரவாளர்களோ ஈடுபடுவது தெரிந்தால், இடைக்கால ஜாமின் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கலவரத்தின் போது ஆசிஷ் மிஸ்ராவின் காரில் இருந்த மூவர் கொல்லப்பட்டது தொடர்பாக நான்கு விவசாயிகள் மீது தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருகிறது.

அவர்கள் நான்கு பேருக்கும் உச்ச நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.