புதுடெல்லி: மாநில அரசுகள், நீதிபதிகள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருடனும் பாஜக தலைமையிலான மத்திய அரசு சண்டையிட்டு வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
தலைமை நீதிபதிகளை கொலீஜியம் நியமனம் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து முரண் குறித்த செய்தி ஒன்றைச் சுட்டிக்காட்டி இதனைத் தெரிவித்துள்ள கேஜ்ரிவால், மற்றவர்கள் வேலையில் தலையிட வேண்டாம் என்று மோடி அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நீதிபதிகள், உச்ச நீதிமன்றம், மாநில அரசுகள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருடனும் மத்திய அரசு ஏன் மோதிக்கொண்டே இருக்கிறது? அனைவருடனும் மோதிக்கொண்டிந்தால் நாடு முன்னேற்றப்பாதையில் பயணிக்க முடியாது. நீங்கள், உங்கள் வேலையைப் பாருங்கள், மற்றவர்களை அவர்களின் வேலையைச் செய்ய விடுங்கள். மற்றவர்களின் வேலைகளில் தலையீடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அம்மாநில முதல்வருக்கும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மாநிலத்தின் துணைநிலை ஆளுநருக்கும் இடையில் அரசு நிர்வாகம் தொடர்பாக பல்வேறு மோதல்கள் நிகழ்ந்து வருகின்றது. கடந்த மாதத்தில், அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பயிற்சிக்காக பின்லாந்து அனுப்பும் டெல்லி அரசின் திட்டத்தை துணை நிலை ஆளுநர் தாமதப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, துணைமுதல்வர் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் ராஜ் நிவாஸ் நோக்கி கேஜ்ரிவால் பேரணியாக சென்றார்.
அதேபோல், டெல்லி புதிய மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கும் நிலையில், மாநில அரசுகளை கவிழ்ப்பதற்கும், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கும் மத்திய அரசு அரசு அரசு அமைப்புகளை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும், தேசிய தலைநகர் டெல்லி அரசு (திருத்தம்) சட்டத்தினை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “துணைநிலை ஆளுநர், அமைச்சரவைக் குழுவின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு கட்டப்பட்டவர் என்றே அரசியலைப்பும் சட்டமும் சொல்கின்றது. இதற்கு, கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட வேண்டியது இல்லை. ஆனால் இதற்கு மாறாக இயற்றப்பட்டிருக்கும் தேசிய தலைநகர் டெல்லி அரசு (திருத்தம்) 2021 சட்டம், அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.