புதுடெல்லி: மத்திய அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், ஏழைகள் மீதான அமைதித் தாக்குதல் என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
2023-24 பட்ஜெட் குறித்த சோனியா காந்தியின் கருத்து ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: “உலகின் குரு, அமிர்த காலம் என்றெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அமைச்சர்களும் உரத்த குரல் எழுப்பி வரும் நிலையில், அவருக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் ஒருவரின் (அதானி) நிதி முறைகேடுகள் வெளியாகி உள்ளன. தனது பணக்கார நண்பர்களுக்கு சாதகமாக செயல்படுவதே பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கை. இதனால், நாட்டுக்கு ஏற்படும் இழப்பை நடுத்தர மக்கள் சுமக்க வேண்டிய நிலை உள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், தவறான ஜிஎஸ்டி அமலாக்கத்தாலும் நடுத்தர மக்களும், சிறு – நடுத்தர தொழில்களும் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் அரசுக்கு ஏற்படும் இழப்புகளை சுமக்க வேண்டிய நிலைக்கு நடுத்தர மக்கள் தள்ளப்படுகிறார்கள். நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டு ஈட்டி எல்ஐசி, எஸ்பிஐ ஆகியவற்றில் சேமித்த பணம், மோசமாக நிர்வகிக்கப்படும் தனியார் நிறுவனங்களுக்கு முதலீடாக வழங்கப்படுகிறது.
உலகின் குரு, அமிர்த காலம் என்றெல்லாம் கூறிக்கொண்டே, நடுத்தர மக்களின் சேமிப்புகளை தங்களுக்கு வேண்டிய தொழிலதிபர்களின் நிறுவனங்களுக்கு வாரி வழங்கும் நடவடிக்கைகளை பிரதமரும் அவரது அமைச்சர்களும் செய்து வருவதால், பாதிக்கப்படும் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
விலைமதிப்பில்லாத பொதுத்துறை நிறுவனங்களை குறைந்த விலைக்கு தனியாருக்கு தாரை வார்க்கும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது. இதிலும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கே பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. இதனால், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து பலரும் குறிப்பாக பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
விவசாயம் தொடர்பாக 3 சட்டங்களைக் கொண்டு வந்த மத்திய அரசு, பின்னர் அதில் தோல்வி அடைந்தது. அதோடு, விவசாயத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்திய மக்கள் எந்த அளவு ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பதை சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய ஒற்றுமை யாத்திரை வெளிச்சம் போட்டு காட்டியது.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, வருவாய் வீழ்ச்சி ஆகியவை ஏழைகளையும், நடுத்தர மக்களையும், கிராமப்புறங்களில் வசிப்பவர்களையும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களையும் கடுமையாக பாதித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களையும் திட்டங்களையும் தற்போதைய அரசு நீர்த்துப் போகச் செய்து வருகிறது. மத்திய அரசின் 2023-24 பட்ஜெட், ஏழைகள் மீதான நரேந்திர மோடி அரசின் அமைதித் தாக்குதலாகும்” என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.