சென்னை: டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதத்தை பார்வையிட அமைச்சர் குழுவினர் இன்று (ஜன.6) முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அறிக்கையை சமர்பித்தனர்.
டெல்டா மாவட்டங்களில் பிப்.1-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்துவந்தது. இந்த மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து மழைநீரில் மிதக்கின்றன. இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு வேளாண் துறையால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், ஈரப்பத அளவை 22 சதவீதம் வரை உயர்த்தி, நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் திடீர் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர் குழு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வேளாண் துறை செயலர், இயக்குநர் மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று (பிப்.5) பயிர் சேதங்களை ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (பிப்.6) மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட்ட அமைச்சர்கள் குழு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தனர்.