கேன்சர் நோயாளிக்கு உதவாமல் இறக்கிவிட்ட பணிப்பெண்கள்.. விமானத்தில் நடந்த கொடூரம்!

புற்றுநோயாளியான பெண் பயணி ஒருவருக்கு உதவாமல் டெல்லி விமான நிலையத்தில் அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் பாதியிலேயே இறக்கிவிட்டிருக்கிறது. இந்த சம்பவம் கடந்த ஜனவரி 30ம் தேதி நடந்திருந்தாலும், இது குறித்து அந்த பெண் பயணி கொடுத்த புகாரால் அம்பலமாகியிருக்கிறது.
அதன்படி அமெரிக்க ஏர்லைன்ஸ் நிர்வாகத்தின் பணிப்பெண்ணால் மீனாக்‌ஷி சேன்குப்தா என்ற பெண் தான் பாதிக்கப்பட்டது குறித்து டெல்லி போலீஸ் மற்றும் சிவில் ஏர் நிறுவனத்திடம் புகார் கொடுத்திருக்கிறார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மீனாக்‌ஷி சேன்குப்தாவுக்கு அண்மையில்தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் டெல்லியில் இருந்து நியூ யார்க் செல்லும் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் அவருக்கு உதவி மறுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அவரது புகாரில், “விமானத்திற்குள் செல்வதற்காக வீல் சேர் கேட்டிருந்தேன். கிரவுண்டில் இருந்த பணியாளர்கள் நல்லபடியாக உதவினார்கள். ஆனால் விமானத்திற்குள் அப்படி இருக்கவில்லை.
image
அங்கு உள்ளே இருந்த பணிப்பெண்ணிடம் என்னுடைய நிலையை விளக்கினேன். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத விமான பணிப்பெண், விமானம் புறப்படுவதற்கு முன்பு வந்து, என் இருக்கைக்கு அருகே இருந்த கைப்பையை எடுத்து மேலே வைக்கும்படி பணித்தார். ஆனால் என்னால் அப்படி வைக்க முடியாமல் போனதால் அவரது உதவியை கேட்டேன். அதற்கு அந்த பெண், “இது என் வேலை அல்ல.” என கறாராக சொல்லி சென்றுவிட்டார்.
ஆகையால் இதுபற்றி புகார் கூற முற்பட்ட போது சக விமான பணிப்பெண்களும் எனக்கு ஆதரவாக எதையும் கூறாமல், அசவுகரியமாக இருந்தால் விமானத்தை விட்டு இறங்கும்படி கூறிவிட்டு அவர்களாக ஒன்றுகூடி முடிவெடுத்து என்னை இறக்கிவிட்டார்கள்.” என மீனாக்‌ஷி சேன்குப்தா குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் வைரலானதும், “புற்றுநோயால் பாதிக்கப்பட்டதன் காரணமாக கைகள் வலுவிழந்துப் போனவரின் ஹேண்ட்பேக்கை மேலே எடுத்து வைக்காமல் அவரை விமானத்திலிருந்து இறக்கிய அமெரிக்க ஏர்லைன்ஸ் ஊழியர்கள் செய்த செயல் அருவருப்பானது. வெட்கக்கேடானது” என ட்விட்டர் பயனர்கள் பதிவிட்டிருக்கிறார்கள்.
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து அறிக்கை வழங்கும்படி அமெரிக்க ஏர்லைன்ஸுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி ஏர்லைன்ஸின் அறிக்கையில், “டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற அமெரிக்க ஏர்லைன்ஸில் விமான ஊழியர்களின் அறிவுறுத்தல்களை கேட்காமல் இடையூறு விளைவித்ததற்காக விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டிருக்கிறார். மீனாக்‌ஷி சேன்குப்தாவின் டிக்கெட் கட்டணம் அவருக்கே வழங்கப்பட்டுவிட்டது. ” எனக் குறிப்பிட்டிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.