ஈரோடு கிழக்கு தொகுதியில் சூடுபிடித்த தேர்தல் பிரச்சாரம்!: இஸ்திரி, தேநீர் போட்டுக் கொடுத்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய ஆர்.பி.உதயகுமார்..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் பரிசீலனை முடிவடைந்துள்ள நிலையில், தேர்தல் பரப்புரையும் சூடுபிடித்துள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கச்சேரி சாலை, காரி வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது இஸ்திரி போட்டும், தேநீர் கடையில் இருந்தவர்களுக்கு தேநீர் போட்டு கொடுத்தும் ஆதரவு திரட்டினார்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து கைத்தறி துறை அமைச்சர் காந்தி, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நேற்று பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டனர். 53வது வார்டில் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காந்தி. அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதேபோன்று வீரப்பன்சத்திரம் பகுதியில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரப்புரை மேற்கொண்டார். அவருக்கும் ஏராளமான பெண்கள் வரவேற்பு அளித்தனர். வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் என்பதால் அங்கு பிற்பகலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.