ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனு திரும்ப பெற நேற்று கடைசி நாள் என்பதால் 8 பேர் வாபஸ் பெற்ற நிலையில் 75 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க 6 பறக்கும் படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது “ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.25,43,000 கைப்பற்றப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தினமும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது” என செய்தியாளர்கள் சந்திப்பில் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.