புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் 2 நீதிபதிகளை நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் கடந்த 6ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, மேலும் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற தலமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்தது.
இதனை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டதாக ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தனது டிவிட்டர் பதிவில் அறிவித்துள்ளார்.புதிய 2 நீதிபதிகளும் விரைவில் பதவியேற்க உள்ளனர். இவர்கள் பதவியேற்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து, முழு பலத்தை எட்டும். அதே சமயம், வரும் மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையே, உச்ச நீதிமன்றத்தின் 6 நீதிபதிகள் 65 வயதை எட்டி ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.