தென்னிந்திய அளவில் மொழி பாதுகாப்பு மாநாடு; கல்வி அமைப்பு அறிவிப்பு.!

ஒன்றிய அரசாங்கம் நடத்திய 37வது பாராளுமன்ற அலுவல் மொழிக்கூட்டத்தில், இந்தியை நாட்டின் ஒரே அலுவல் மற்றும் பயிற்றுமொழியாக முடிவுசெய்து அறிவித்துள்ளது. ஒன்றிய அரசாங்கத்தின் இம்முடிவை எதிர்த்து அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, தென்னிந்திய அளவில் மொழிப் பாதுகாப்பு மாநாட்டை வருகிற 17ம் தேதி சென்னையில் சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடத்தவுள்ளது.

இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவ்வமைப்பின் அகில இந்தியக் கமிட்டி உறுப்பினர் கமால் சயின் கூறியதாவது: இந்தியை மட்டுமே ஒற்றை ஆட்சி மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆங்கிலத்தை நீக்குவதற்கும் மற்ற இந்திய மொழிகளின் (தாய்மொழிகளின்) வளர்ச்சியை சிறுமைப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசாங்கம் எடுத்துவருவதை நாமெல்லோரும் அறிவோம்.

மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் இந்தி படிப்பதை ஏற்கனவே கட்டாயமாக்கிவிட்டனர். தற்போது மருத்துவக் கல்லூரிகள், ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இந்தியைப் பயிற்றுமொழியாக ஆக்குவதற்கும் மத்திய அரசாங்கப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை இந்தியில் மட்டுமே நடத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பல மொழிகளைப் பேசும் நம் நாட்டில் இந்தி மொழியை அலுவல் மொழியாகக் கொண்டால், இந்தி மொழியை இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாகக் கொண்ட தென்னிந்திய, கிழக்கிந்திய மக்களைவிட இந்தி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு அது நியாயமற்ற வகையில் சாதகமாக அமைந்துவிடும்.

மத்தியப் பணிகளில் சேர்வதற்கு இந்தி மொழியில் திறன் பெற்றிருப்பது முக்கியமாக ஆக்கப்பட்டால், அதில் திறன் பெறாதவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர்கள். இது மிகவும் பாரபட்சமான போக்காகும்.

நம்மைப்போன்ற பன்மொழி பேசும் சமுதாயத்தில் நாடு முழுவதற்குமான ஒற்றை ஆட்சி மொழி என்று இருக்க முடியாது என்பது நமது கருத்தாகும். எனவேதான் 8 வது அட்டவணையில் இந்தியாவின் 22 மொழிகளுக்கு சம அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான தொடர்புக்கு ஆங்கிலம் ஒரு இணைப்பு மொழியாக உருவாகிவிட்டது. அனைத்துத் துறைகளிலும் ஏற்படும் நவீன வளர்ச்சிகளை நமக்கு கொண்டுவரும் வாயிற்கதவாக ஆங்கிலம் உள்ளது, அது மட்டுமல்லாது இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் ஆங்கிலம் உதவியுள்ளது.

மாணவர்களின் அறிவுத்திறன் மேம்பாட்டிற்கும் மனவளர்ச்சிக்கும் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை அவரவர் தாய்மொழியில் கற்பித்தல் இன்றையமையாதது. ஆனால் இன்று முக்கியமான நவீன நூல்கள், சஞ்சிகைகள் எல்லாம் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அவற்றையெல்லாம் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் இதுவரை எடுக்கவில்லை என்பது துரதிர்ஷ்டமானது. எனவே உயர்கல்வியையும் ஆராய்ச்சியையும் தாய்மொழி வாயிலாக மேற்கொள்வது இன்னும் கடினமாக உள்ளது என்ற யதார்த்த உண்மையையும் மறந்துவிடக்கூடாது.

இந்த உண்மைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இந்தியை ஒற்றை ஆட்சிமொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஏற்கவேண்டுமென்று மக்களை நிர்பந்திப்பது நிச்சயம் பாரபட்சமானதாகும். இது அரசியல்ரீதியாக தூண்டப்படுகிறது, ஆதிக்கவெறியுடையதாக இருக்கிறது.

மூன்று புதிய கண்டுபிடிப்புகள்…! அசத்தும் மாணவன்…!

இந்தி – இந்து – இந்துஸ்தான் என்ற கோஷத்தை முன்வைக்கும் ஒன்றிய பாஜக அரசாங்கம், மொழிவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்துவதைத் தவிர வேறு எதையும் இந்த நடவடிக்கை செய்யாது. மத்திய அரசாங்கத்தின் இந்தப் பேரழிவு மொழிக் கொள்கைக்கு எதிராக அகில இந்திய கல்விப் பாதுகாப்பு இயக்கம் மக்கள் ஆதரவுக் கருத்தைத் திரட்டிவருகிறது.

அதன் ஒருபகுதியாக தென்னிந்திய மொழிப் பாதுகாப்பு மாநாட்டை பிப்ரவரி 17ம் தேதி அன்று சென்னையில் நடத்த உள்ளோம். கல்வியை நேசிக்கும் அனைவரும் இதற்கு ஆதரவுக் கரம் நீட்டி, இதில் கலந்துகொண்டு இம்மாநாட்டை வெற்றிபெறச் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.